புதன், 29 ஜூலை, 2026

இருளில் ஒரு தீபம்



பட்டணத்திலிருந்து ஏறக்குறைய 10 கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் அந்தக் கிராமத்தில் மாத்திரம் இரவு சீக்கிரமே இறங்கி விடும்; காரணம் சுற்றிலும் அடர்ந்து நிற்கும் மரங்களும் செடிகளுமே. மாலை ஆறு மணிக்குப் பிறகு தெருக்கள் அனைத்தும் வெறிச்சோடிக் காணப்படும். ஆங்காங்கே நாய்களின் குரைப்புச் சத்தமும், காற்றில் அசையும் மரக்கிளைகளின் சலசலப்பும் மட்டுமே கேட்டுக்கொண்டிருக்கும். மின்விளக்குகள் இல்லாத அந்தக் காலத்தில், இரவு என்றாலே அக்கிராமத்தின் மக்களுக்கு ஒரு வித அச்சம் நெஞ்சிலே தொற்றிக் கொள்ளத் தொடங்கும்.

இருப்பினும், அந்த இருளுக்கும் அஞ்சாத ஒரு முதியவர் இருந்தார்.
எழுபது வயதைக் கடந்த அந்த முதியவரை அனைவரும் "தாத்தா" என்றே அழைப்பது வழக்கம். ஒவ்வொரு நாளும் மாலை மயங்கும் வேலையும்,  அவர் தன் வீட்டின் வாசலில் அமர்ந்து, பழைய பித்தளை விளக்கில் எண்ணெய் ஊற்றி, திரியைச் சரிசெய்து, தீபத்தை எரியவிடுவார். பிறகு அந்த விளக்கை கையில் ஏந்தினவராக மெதுவாக கிராமத்தின் பிரதானத் தெருவில் நடந்து செல்வார்.

அவரைப் பார்த்தவர்கள் பலரும் வியந்தார்கள். "இந்த வயதில் எதற்காக இந்த சிரமம்?" என்று சிலர் நினைத்தார்கள்.

ஒருநாள், நகரத்தில் படித்து வந்த இளைஞன் ஒருவன் அவரை வழிமறித்தான்.

"தாத்தா, உங்களிடம் நான் ஒரு கேள்வி கேட்கலாமா?" என்றான்.
"கேள் மகனே" என்றார் தாத்தா.

தாத்தா, "உங்களுக்குக் கண் பார்வை சரியாக இல்லை. வயதும் ஆகிவிட்டது. அப்படியிருக்க, இந்தச் சிறிய விளக்கை கையில் ஏந்திக்கொண்டு தினமும் ஏன் தெருவில் நடந்து செல்லுகிறீர்கள்? இதனால் கிராமத்திலும் மற்றும் தெருவிலும் என்ன மாற்றம் வந்துவிடப்போகிறது?" என்று கேட்டான். 

அந்த இளைஞனின் கேள்விக்கு முதியவர் பதில் ஏதும் சொல்லாமல் அமைதியாக தொடர்ந்து நடந்தார்.
சில அடிகள் தூரம் சென்றபின், நின்று, அந்த விளக்கை உயர்த்திக் காட்டியவாறு,  "மகனே... இந்த ஒளி எனக்காக மட்டும் எரியவில்லை" என்று உரக்கக் கூறினார்.

முதியவரின் வார்த்தைகளைக் கேட்ட இளைஞன் அவரை குழப்பத்துடன் பார்த்தான். அப்போது அந்த முதியவர் இளைஞனை நோக்கி, எனது கண்களில் பார்வை குறைவாய் இருந்தாலும், எதிரே வருவோரை ஒருவேளை நான் பார்க்க இயலாமல் போனாலும், "எதிரே வருகிறவர்கள் என்னைக் காண வேண்டும்" என்பதற்காகவே இச்சிறிய தீபத்தை என் கைகளில் தினமும் நான் ஏந்திச் செல்கிறேன் என்றார். இந்த விளக்கின் ஒளி எனக்கு மாத்திரம் அல்ல, இந்த பாதையில் செல்லும் மற்றவர்களுக்கும் வழிகாட்டும். இல்லையென்றால், யாராவது பாதையில் இருக்கும் பள்ளத்தில் இடறி விழுந்து விடக் கூடுமே. "நான் சுமப்பது ஒரு விளக்கல்ல; மற்றவர்களின் பாதுகாப்பிற்கான ஒரு பொறுப்பு." என்று கூறினார். 

இந்த வார்த்தைகள் இளைஞனின் காதுகளில் விழுந்தபோதிலும், அவன் மனதிலோ அது ஆணித்தரமாகப் பதியவில்லை. 

சில வாரங்கள் கடந்தன.

ஒரு நாள் கருமேகங்கள் வானத்தை மூடின. மழையும் பலமாகப் பெய்துகொண்டிருந்தது. இரவு நேரத்தில் கிராமம் முழுவதும் கண்ணுக்கெட்டிய தூரம் வரை இருள் மட்டுமே அடர்ந்து காணப்பட்டது. அந்த இளைஞனோ வேலையினை முடிந்து பட்டணத்திலிருந்து கிராமத்திற்குத் திரும்பிக்கொண்டிருந்தான். பாதை தெரியவில்லை. அங்கும் இங்கும் மழைநீர் ஓடியதால் வழியும் மாறியிருந்தது. ஒரு கட்டத்தில் அவன் தடுமாறி விழவும் நேரிட்டது.

அந்த நேரத்தில், தொலைவில் ஒரு சிறிய ஒளி தெரிந்தது.
மழையையும் காற்றையும் பொருட்படுத்தாமல் அந்த முதியவர் தனது விளக்கை கைகளால் மறைத்தபடி நடந்து வந்துகொண்டிருந்தார். இருளில் ஆங்காங்கே பாதை தெரியாமல் நின்று கொண்டிருந்த பலரும் அவரை நோக்கி வரத்தொடங்கினார்கள். பின்னர், அந்தச் சிறிய ஒளியைப் பின்தொடர்ந்து, அனைவரும் பாதுகாப்பாகத் தங்கள் தங்கள் வீடுகளை அடைந்தனர்.

மறுநாள் காலையில், இளைஞன் நேராக முதியவரின் வீட்டிற்குச் சென்று, அவருடைய கால்களில் விழுந்து, "தாத்தா, நேற்று இரவுதான் புரிந்தது. இருளை அகற்ற சூரியன் தேவையில்லை. ஒரு சிறிய விளக்கே போதும்" என்று என்றான். இதைக் கேட்ட முதியவரின் கண்கள் ஈரமானது. "மகனே, இதுதான் தேவன் நம்மிடம் எதிர்பார்க்கும் வாழ்க்கை. உலகத்தின் இருளைப் பற்றி குறை சொல்லாதே. உன்னால் முடிந்த அளவு ஒளியாக இரு. ஒரு மனிதனின் வாழ்க்கையில் நீ ஏற்றும் சிறிய ஒளி, அவனுடைய நித்திய வாழ்வின் தொடக்கமாகவும் இருக்கலாம்" என்றார்.

அந்த நாள் முதல் அந்த இளைஞன் மாறினான். பிறரை ஊக்குவிக்கும் வார்த்தைகளைப் பேசத் தொடங்கினான். துன்பப்படுகிறவர்களுக்கு ஆறுதல் கூறும் இளைஞனாக மாறினான். தேவனை அறியாதவர்களுக்கு நற்செய்தியை கூறி அறிவித்தான். 

"இருளைச் சபிப்பதைவிட ஒரு தீபத்தை ஏற்றுவது மேலானது" என்ற அந்தப் பாடம், அவன் வாழ்நாள் முழுவதும் மறக்காத சாட்சியாக மாறியது.

நம்முடைய வாழ்க்கை உலகத்திலிருந்து ஒளியை எதிர்பார்க்கும் வாழ்க்கையாக இருக்கக்கூடாது. மாறாக, உலகத்திற்கே ஒளியாக இருக்கும் வாழ்க்கையாக இருக்கவேண்டும். நம்முடைய அன்பான வார்த்தை, ஜெபம், உதவி, பரிசுத்தமான வாழ்க்கை—இவைகளின் மூலம் தேவன் பலருடைய வாழ்க்கையின் இருளை அகற்றமுடியும் 


இவ்விதமாய், மனுஷர் உங்கள் நற்கிரியைகளைக் கண்டு, பரலோகத்திலிருக்கிற உங்கள் பிதாவை மகிமைப்படுத்தும்படி, உங்கள் வெளிச்சம் அவர்கள் முன்பாகப் பிரகாசிக்கக்கடவது. மத். 5:16

வெள்ளி, 10 நவம்பர், 2023

தோற்றமும், மாற்றமும்

 


தோற்றமும், மாற்றமும்


குறிஞ்சிக் குளம், சின்னதோர் கிராமம், இருபுறமும் பக்கவாட்டில் வரிசையாக ஆறு தெருக்கள். இந்த சின்ன கிராமத்திலேதான் குடியிருந்தது செல்லமணியின் குடும்பம். 'ஏபுள்ள இன்னுமா எழும்பல நீ, எவ்வளவு நேரந்தான் படுத்து கிடப்ப, சீக்கிரத்தில எழும்பி வீட்டு வேலயைப் பாக்கப்புடாதா' என்று படுக்கையில் அயர்ந்து தூங்கிக்கொண்டிருந்த செல்லமணியை தாய் பூந்தெழிலம்மை கூப்பிட, 'பொறேன்மா, கொஞ்சம் தூங்கிட்டு வர்ரேன், ரொம்ப தூக்கமா வருது' என்று தாயின் காதில் விழும்படியாகப் புலம்பினாள் செல்லமணி. 'வயது இருபது ஆயிற்று, வளர்ந்து ஆளாயிட்ட, புகுந்த வீட்டில போயி உன் மாமியாருகிட்ட இப்படி புலம்ப முடியுமா?' என்று தனக்குள்ளோ சொல்லிக்கொண்டு, தன் வேலையைத் தொடர்ந்தாள் தாய் புந்தெழிலம்மை. 'நான் வடிச்சி கொட்டுற வீட்டுல நீ எப்படியிருந்தாலும் பரவாயில்ல, நீ வடிச்சிக் கொட்டப்போற வீட்டுல உனக்கு உருப்படியா வாழத்தெரிஞ்சா போதும்' என்று தனக்கான கடமை என காலை வேலையை வீட்டில் தொடர்ந்தாள் தாய் பூந்தெழிலம்மை. 

நாட்கள் ஓட ஓட, சில வருடங்களும் கடந்தது, செல்லமணியின் தோற்றத்துடன் வயதும் 23 என வளர்ந்தது. குழந்தையாகவும்; மற்றும் பிள்ளையாகவும் பார்த்த செல்லமணியை, கொமராகவே (மணமுடிக்கும் வயதெய்தியப் பெண்) பார்க்கத் தொடங்கிய தாய் மற்றும் தந்தையின் கண்கள், அவள் குடியேற்றச் சரியான வீட்டையும், குடும்பமாகச் சரியான புருஷனையும் தேடத்தொடங்கின. 

அது ஒரு மாலை நேரம், வேலைகளை முடித்து கிராமம் முழுவதும் வீடு திரும்பிக்கொண்டிருந்த நேரத்தில், செல்லமணியின் வீட்டுக் கதவை யாரோ தட்டும் சத்தம். யாரென்று பார்க்க, பூந்தெழிலம்மை கதவைத் திறந்தபோது, தனக்கு தெரிந்த  புதுமலை என்னும் ஊரிலிருந்து செல்லமணியின் தந்தைக்கு நெருக்கமான உறவினரான மணிமாறன் வாசலில் நிற்பதைக் கண்டதும், மகிழ்ச்சியில் வாங்க வாங்க என வரவேற்று வீட்டினுள் அழைத்துச் சென்றாள் பூந்தெழிலம்மை. தேனீர் கொடுத்து, சாப்பாடு செய்யுறேன், சாப்பிட்டுட்டுத்தான் போகனும் என்ற பூந்தெழிலம்மையின் ஆசுவாசத்துக்கும் அன்புக்கும் அடிபணிந்து, சரி என்று சம்மதம் தெரிவித்தார் மணிமாறன். பூந்தெழிலம்மை ஒருபுறம் சமைத்துக்கொண்டிருக்க, வீட்டின் ஒரு மூலையில் மணிமாறனும், செல்லமணியின் தந்தை பூங்கொன்றனும் குசலம் விசாரித்துப் பேசிக்கொண்டிருந்தனர். 

வந்த விசயத்தைப் பேச நேரம் வரக் காத்திருந்த மணிமாறன் பூங்கொன்றனை நோக்கி, 'சாப்பிடுறதுக்கு முன்னாடி நான் வந்ததுக்கான சங்கதியைச் சொல்லனும்' என்று மெல்ல முணுமுணுத்தவராக, 'பாப்பாவுக்கு ஏதாவது வரன் பார்க்கிறீங்களா?' என்று செய்தியின் முதல் வரியை வாசிக்கத் தொடங்கினார். இதைக் கேட்ட செல்லமணியின் தந்தை பூங்கொன்றன், 'தேடிக்கிட்டுதான் இருக்கோம்; ஒத்த புள்ள, செல்லமா வளத்துட்டோம், எங்கயும் போயி கண்ணு கலங்கிட்டு நிக்கக்கூடாது' என்று மணமகனுக்கான விருப்பத்தைத் தெரிவிப்பதற்கு முன், மகளைக் குறித்த பாசத்தைத் தெரிவிக்க, பதுங்கிப் பதுங்கிப் பேசிய மணிமாறன், 'புதுமலையில இருக்கிற மல்லிகா மகன் பட்டணத்துல வேல பாக்கிறான்; நல்ல குணக்காரன், எந்த கெட்ட பழக்க வழக்கமும் இல்லாதவன், யார் கூடயும் ஒரு சண்ட சச்சரவுக்கும் போகாதவன்' என்று ஒரு வாலிபனை தனது வார்த்தைகளால் வர்ணித்துப் பேசியதோடு, அவனுக்கு ஏத்தாப்ல ஒரு புள்ள கிடைக்குமான்னு தேடிக்கிட்டிருக்கா மல்லிகா, உங்க மகள் செல்லமணியை ஏதோ ஒருத்தருடைய கலியாணத்துல மல்லிகாவும் மகனும் பார்த்தாகளாம். செல்லமணியின் பவ்யமும், தோற்றமும், அமைதியும், மற்றவருடனான பழகும் விதமும் அவர்களுக்கு ரொம்ப புடிச்சிபோச்சாம், ஒருபுறம் அவங்க உங்களுக்கு தூரத்துச் சொந்தம்தான், என்றாலும் நேரடியா கேட்டுட முடியாதுல்ல, அதனால என் வீட்டிக்கு வந்து அவங்க விருப்பத்தச் சொல்லி, நீங்க கொஞ்சம் கேட்டுச் சொல்லமுடியுமா? என்று சொல்ல, இவர்கள் பேசிக்கொள்ளும் அத்தனை வார்த்தைகளையும் அறைக் கதவின் மறுபுறத்தின் ஒட்ட நின்று ஒட்டுக் கேட்டுக்கொண்டிருந்தாள் மணமகளாகவிருக்கும் செல்லமணி. 

ஒருபுறம் திருமண ஆசையின் கனவு கதவுக்குப் பின்னே அவ்வப்போது வந்து செல்ல, கதவுக்கு பின்னால் கல்யாணமே நடக்கும் உணர்வும் கொஞ்சம் கொஞ்சமாக செல்லமணியை இழுத்து இழுத்து ஊஞ்சலாட்டிக்கொண்டிருந்தது. அந்த சில நிமிடங்கள் கதவின் மறுபுறம் செல்லமணிக்கு மணமேடையாகவே மாறிப்போனது. என்றாலும், குறிஞ்சி குளம் கிராமத்தின் பெண்கள், கணவனுக்குக் கீழ்ப்படிந்து நடப்பதை அதிகம் அப்பியாசப்படுத்துபவர்கள், அக்கிராமத்தின் ஆண்பிள்ளைகளானாலும் அல்லது பெண்பிள்ளைகளானாலும், தங்கள் இஷ்டத்திற்கு ஒருபோதும் தங்களை உட்படுத்திக்கொள்பவர்களல்ல. எந்த முடிவு என்றாலும், தந்தையின் வார்த்தையே முடிவாக இருக்கும் என்பதை செல்லமணியும் அறிந்திருந்தாள். 

செல்லமணியின் தந்தை பூங்கொன்றனும், புதுமலையிலிருந்து வந்திருந்த மணிமாறனும் பேசிக்கொண்டிருக்கும்போதே, 'சாப்பிட்டுட்டுப் பேசலாம், என்று இடைமறித்தாள் செல்லமணியின் தாய் பூந்தெழிலம்மை'. கதவின் மறுபுறம் நின்றுகொண்டு செய்திகள் அனைத்தையும் ஒட்டுக்கேட்டுக்கெர்ண்டிருந்த செல்லமணிக்கோ, அந்த சாப்பாட்டு நேரம் அப்போது இடைவேளையாகிப்போனது. வெட்டி வந்த வாழை இலையில், சூடாக சாதத்தை அள்ளி அள்ளிவைத்துப் பறிமாறினாள் செல்லமணியின் தாய் பூந்தெழிலம்மை. அறுத்துச் சமைத்த கோழிக்குழம்புடனும், தோட்டத்தில் கிடைத்த பசுங்காய்கறிகளால் சமைத்த அவியல் கூட்டுடனும் இன்னும் கொஞ்சம் என்று, ரசம் ஊற்றி, மோர் ஊற்றி இனிப்பும் கொடுத்து உபசரித்தாள் செல்லமணியின் தாய். 

விருந்தினரை உபசரித்ததும், 'செல்லமணி' என்று தாய் கூப்பிட, 'இதோ வந்துட்டேன் மா' என மௌமான பதிலோடு தாயிருக்கும் அறை நோக்கி செல்லமணி செல்ல, மகளை அருகில் அமர்த்திக்கொண்டு, தானும் உணவு உண்ணத்தொடங்கினாள் செல்லமணியின் தாய். 

கொஞ்சம் ஓய்வு எடுக்கிறீகளா? என்று செல்லமணியின் தந்தை கேட்க, இன்னும் கொஞ்ச நேரந்தான, இருக்கட்டும், பரவாயில்ல, உங்க பதில கேட்டுட்டு உடனே கிளம்பனும் என்று மணிமாறன் தனது வருகைக்கான முடிவு வரிகளை எழுத, இந்த வந்திர்ரேன், என்று சொல்லியவாறு, 'ஏபுள்ள' என்று தனது மனைவியும் செல்லமணியின் தாயுமான பூந்தெழிலம்மையை அழைத்தார் செல்லமணியின் தந்தை பூங்கொன்றன். 'என்னங்க?' என்ற ஒற்றைச் சொல்லுடன், வந்த மனைவியை, வீட்டில் ஓரமாக ஒரு இடத்திற்கு கூப்பிட்டுச் சென்று, விசயத்தைச் சொல்ல, இருவரின் ஒப்புதலோடு பதில் ஒன்றானது. 

முடிவு வரிகளை எழுத, மணிமாறனுக்கு முன் வந்து நின்றார் செல்லமணியின் தந்தை பூங்கொன்றன். 'மாப்பிள்ளையப் பத்தி நீங்க சொன்னீங்க, நாங்களும் பாத்திருக்கோம், கேள்விப்பட்டிருக்கோம், எங்கள் சம்மதத்தை தெரிவித்துவிடுங்கள்' என்ற வார்த்தை செல்லமணியின் தந்தையின் வாயிலிருந்து வந்ததைத் தொடர்ந்து புதுமலைக்கு புறப்பட்டார் மணிமாறன். அதுவரை, விருந்தினரின் வார்த்தைகளை கதவின் மறுபுறத்தில் நின்று கேட்டு கேட்டுக்கொண்டிருந்த செல்லமணியோ விடை எழுதப்படும் நேரத்தில் விருந்துண்டுகொண்டிருந்தாள். அச்சமையம், செல்லமணி சாப்பிட்டுவிட்டு வந்ததைக் கண்ட மணிமாறன், 'நல்லாயிருக்கியாம்மா? போயிட்டு வர்ரேன்' என்ற இரண்டு வார்த்தைகளோடு விடைபெற்றார். 

விருந்தினர் வீட்டை விட்டுச் சென்றதும், அவர் எழுதிய விடையை அறியக் காத்திருந்தாள் மகள் செல்லமணி. அவ்வாறே, விருந்தினருக்கு விடைகொடுத்ததும், மகள் செல்வமணியின் வாய்ப்பிறப்பை அறியக் காத்திருந்தனர் செல்வமணியின் தந்தையும் தாயும். பெற்றோரின் வாய்மொழியினால், தனக்கு வாழ்க்கை பிறக்கவிருப்பதை அறிந்துகொண்டதோடு, 'உங்கள் விருப்பம்' என்று பதிலாக இசைவும் தெரிவித்தாள். 

மங்கள நாள் அது, செல்வமணியின் இல்லற வாழ்க்கை இனிதே தொடங்கியது. பெற்றெடுத்த மகளை, இன்னொரு வீட்டில் விட்டுவிட்டு வரும் தருணம் அது, செல்வமணியின் தாய் மற்றும் தந்தையின் நெஞ்சில் வலி மிகுந்திருந்தாலும், பெண்பிள்ளை அவளுக்கு வழி  அதுதான் என்பதை அறிந்தவர்களாக, அவளை அணைத்து தங்கள் கண்ணீரை ஆனந்தமாக மாற்றிக்கொண்டனர். 

நாட்கள் கடந்தன, ஆறு மாதங்கள் உருண்டோடியிருந்தன. பிறந்த வீட்டிலிருந்த மகள் புகுந்த வீட்டில் எப்படி இருப்பாளோ! என்ற என்ற எண்ணத்துடன், மகளை பார்க்க விரும்பிய தாயின் விருப்பத்திற்கு இணங்க, செல்வமணியின் தந்தை தன் மனைவியை செல்வமணியின் வீட்டிற்கு அழைத்துச் சென்றார். காலையில் எழுவாளா? மாமியாருக்கு உதவி செய்வாளா? வீட்டில் வேலை செய்கின்றாளா? இன்னும் எத்தனையோ கேள்விகள் ஒருபுறம் செல்வமணியின் தாயைத் துளைத்தெடுத்துக்கொண்டிருக்க, கணவனோடு செல்வமணியின் வீடு இருக்கும் புதுமலைக்கு விரைந்தாள். சம்மந்தாரின் வீட்டில் காலடி எடுத்துவைத்ததும், வெளியே வந்த செல்வமணியின் மாமியார் வாங்க வாங்க என்று செல்வமணியின் பெற்றோரை வரவேற்று வீட்டினுள் அழைத்துச் சென்றார். மகளைக் குறித்து எதுவும் புகாராகச் சொல்லுவார்களோ என்று பயந்துகொண்டிருந்த, செல்வமணியின் தாய்க்கு அதிர்ச்சி. செல்வமணியின் தாய்க்கு தேநீர் கொடுத்து, அருகிலே வந்தமர்ந்த செல்வமணியின் மாமியார், 'உங்க புள்ள எங்க வீட்டுக்கு வந்தது, எங்களுக்கு இன்னொரு புள்ள புறந்தது போல இருக்கு.' பொம்பள புள்ள இல்லாத எங்க ஊட்டுல பொன்னா அவ எல்லாத்தையும் பாத்துக்கறா, நாங்க எழுவதற்கு முன் எழுந்து எங்களுக்கு தேநீர் கொடுத்து, சமையல் அனைத்தையும் முடித்து, சாப்பிட அவள் அழைக்கும் குரலைத்தான் அனுதினமும் கேட்கிறோம். சின்ன சின்ன உதவிகளையே எங்கள் வீட்டில் இப்போது செய்கிறோம் நாங்கள் என்று அவர்கள் சொன்னபோது, செல்வமணியின் தாயின் கண்கள் நீரில் குளித்தன. பிறந்த வீட்டின் வாழக்கையையும், புகுந்த வீட்டின் வாழ்க்கையையும் புரிந்துகொண்ட அவளை நினைத்து ஆனந்தத்துடன் வீடு திரும்பினர் செல்வமணியின் பெற்றோர். 

தோற்றம் எங்கே எப்படி நடந்திருந்தாலும், மாற்றத்தைப் புரிந்துகொண்டதினால் செல்வமணியின் வாழ்க்கை மகிழ்ச்சியாயிருந்தது. 

  


வெள்ளி, 24 மார்ச், 2023

விஷம்

 சிறுகதை

www.sinegithan.in


இரவு நேரம் குடத்தில இருந்த தண்ணிய கொஞ்சம் சின்ன பாத்திரத்தில சரிச்சி, அணைஞ்சிபோன அடுப்புக்கு மேலே இருந்த சோத்துப் பானையில எஞ்சியிருந்த சோத்துக்குள்ள கொஞ்சமா ஊத்தி, கையால சோத்த தண்ணியோடக் கரச்சி கஞ்சியாக்கிக் குடிச்சிப்புட்டு, ஒண்டிக்கட்டையா தான் வாழும் பனை ஓலை குடில் போன்ற மண்கட்டு வீட்டில, வலக்கையை மடக்கி முடக்கி தலையணையா வச்சிக்கிட்டு, வாழ்ந்த நாள் நினைவுகள் அவ்வப்போது வந்துபோக, முடிந்துபோன தாரத்தின் நாட்கள் முன்னுக்கு வந்து நிற்க, பெற்றெடுத்தப் பிள்ளைகள் தூரத்தில் வாழ்ந்திருக்க அத்தனையையும் நினைத்துக்கொண்டிருந்த முதியவரை தன் மடியில் அள்ளி அணைத்திருந்தது தூக்கம்.  

இரவு தன்னை ஆழப்படுத்திக்கொண்டே செல்லச் செல்ல, நள்ளிரவின் உச்சத்தில், எள்ளளவும் தன்நினைவின்றி உலகத்திற்கும் உடலுக்கும் தொடர்பேதுமில்லாதவரைப்போலத் தூங்கிக்கொண்டிருந்தபோது, திடீரென செவிகளில் 'டொம் டொம் டொம்' என்று ஒன்றன் பின் ஒன்றாய்ப் பாத்திரங்கள் வரிசையாகச் சரிந்துவிழுந்துகொண்டேயிருக்கும் சத்தங்கள் கேட்க, சவம்போல் கிடந்த அவர் சட்டென எழுந்து, தன் வீட்டின் அடுப்பங்கறைக்குச் சென்று அங்கும் இங்கும் அலசிப் பார்த்தார். கண்களில் ஏதும் தென்படாதிருக்க, ஒன்றும் புரியாதவராக, எங்கிருந்து வந்தது சத்தம் என்று சற்று யோசிப்பதற்குள், செவிகளில் வந்து விழுந்தது மீண்டும் பாத்திரங்கள் சரிந்துவிழும் தொடரொலி. தூக்கத்திலிருந்து எழுந்திருந்தபோதிலும், சுதாரித்துக்கொண்ட முதியவர், மெல்ல மெல்ல சத்தம் வந்த திசையை நோக்கி தனது பாதங்களை எடுத்துவைத்து நகர்ந்து செல்ல, 'சில்' என்ற ஒலியுடன் நிலவியது அமைதி; அது அண்டை வீட்டின் முகம் பார்க்கும் கண்ணாடி உடைந்த சத்தம். இனி தன் முகத்தைத் தானே பார்த்துக்கொள்ள முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டனர் இருவரும். 

அண்டை வீட்டிலிருந்துதான் இத்தனை சத்தங்களும், சந்திக்கு வருகின்றன என்பதை அறிந்துகொண்ட முதியவர், அந்த வீட்டின் பின்முனையில் திறந்து கிடந்த ஒருபுறக்கதவு இல்லாத ஜன்னல் வழியாக எட்டிப் பார்த்தபோது, புதிதாக குடிபுகுந்திருந்த கணவனும் மனைவியும் கையில் கிடைத்தவைகளைக் கொண்டு ஒருவரை ஒருவர் தாக்கிக்கொண்டிருந்தனர். 'போதும்பா, நிறுத்துங்க, நாலு குடும்பங்க வாழுற தெரு இது' என்ற சத்தம் தொண்டை வரை வந்து நின்றபோதிலும், முதியவரின் வாயிலிருந்து அவை வெளியேற மறுத்தன. ஒத்தக்கட்ட நம்மால இவங்கள என்னத்த செய்ய முடியும்? என்று தனக்குள்ளேயே பொருமிக்கொண்டவராக, கையிலிருந்த ஊன்றுதடியைப் பிடித்துக்கொண்டு, மெல்ல மெல்ல நடந்து, தான் வசிக்கும் வீட்டறைக்குள்ளேயே மீண்டும் வந்து படுத்தார் முதியவர். 

மாதங்களாகவும், வருடங்களாகவும் நாட்கள் கடந்தோடின, நித்தம் நித்தம் இத்தனை சண்டைகளுடனான குடும்ப வாழ்க்கையின் மத்தியிலும் 'குவா குவா' என்ற குழந்தை ஒன்றையும் அத்தம்பதியினர் பெற்றெடுத்தபோது, அதிர்ச்சியில் உறைந்துபோனார் முதியவர். எப்படி சாத்தியம் இது? என ஏழெட்டு கேள்விகள் அவருக்குள்ளே வந்துபோனாலும், தனிக்கட்டையாய்க் கிடக்கும் அவரால் அதற்குத் தீர்ப்பெழுதத் தெரியவில்லை. பால்குடி மறந்து, வளர்ந்து குழந்தை அடியெடுத்து நடக்கப்பழகிய போதிலும், பெற்றெடுத்த அவர்களுக்குள் வாய்ச்சண்டையோ வளர்ந்துகொண்டேதானிருந்தது. ஒவ்வொரு முறை சண்டை வரும்போதெல்லாம், புருஷன் திட்டுவதும், மனைவி உடனே ஓடிச் சென்று தான் மறைவாக வைத்திருக்கும் விஷமருந்துப் பாட்டிலை கையில் எடுத்து குடித்துவிடுவேன் என மிரட்டுவதும் வழக்கமாயிருக்க. குழந்தையும் சிறுவன் என்ற பருவத்தைத் தொட்டது. 

அம்மாவுக்கும் அப்பாவுக்கும் சண்டை வரும்போதெல்லாம், அம்மா செய்வதை அடிக்கடிப் பார்த்துப் பார்த்து தனது நினைவிலே பதித்திருந்த சிறுவன், பெற்றோர் தனியே தன்னை விட்டுவிட்டு வெளியே சென்றிருந்த நாளொன்றிலே, சண்டையின் நேரத்தில் தாய் எடுக்கும் அந்த பாட்டலில்  இருப்பது என்ன எனக் காண ஆவல்கொண்டு, சற்று எட்டாத உயரத்திலிருக்கும் அந்தப் பாட்டிலை, கட்டைகளை அடுக்கி ஏறி, கைகளால் எடுத்து திறந்து, விபரம் அறியாது வாயில் ஊற்றிவிட, வாந்தியும் மயக்கமும் வந்து வாசலண்டையிலே விழுந்துகிடந்தான். எல்லாம் முடித்துவிட்டு, வாங்கியதெல்லாவற்றையும் சுமந்துகொண்டு, சற்று நேரத்தில் வீடடைந்த பெற்றோர், வாசலிலே விழுந்துகிடந்த பிள்ளைக்கு அருகில் திறந்துகிடந்த விஷமருந்து பாட்டிலைக் கண்டதும், தூக்கிக்கொண்டு மருத்துவமனைக்கு ஓடினபோதிலும், குழந்தை பிழைப்பதற்குக் காலம் கடந்திருந்தது.  பெற்றோர்களின் சண்டை தீர்வதற்கு முன், பிள்ளை தனக்குத் தீர்ப்பெழுதிக்கொண்டது. குழந்தைக்கு விஷமானது பாட்டலிலிருந்ததல்ல, வீட்டிலிருந்ததே. வாழ்க்கையைப் பிணக்காக்கினப் பெற்றோரால், வாழ்வையே பாராத ஓர் பிஞ்சு வீழ்ந்துபோனது.

புதன், 13 அக்டோபர், 2021

வசனம் வீணாவதில்லை

 வசனம் வீணாவதில்லை

www.sinegithan.in


கல்லூரி வகுப்புகள் முடிந்ததும், விடுதியை நோக்கி நடந்துகொண்டிருந்தான் ராகுல்; வீட்டை விட்டு தூரமாயிருந்ததால், வீட்டின் நினைவுகள் அவ்வப்போது அவனை வாட்டியெடுத்தன. ஒருபுறம் வீட்டில் வியாதிப்படுக்கையில் இருக்கும் தாய், மற்றொருபுறம் குடித்துவிட்டு குடும்பத்தினைக் குறித்து கவலையற்று வாழும் தந்தை. வறுமையின் நிமித்தம் உறவினர்களும் தனக்குத் தூரமாயிருக்கும் சூழ்நிலை. நண்பர்களது உதவியுடன் கல்லூரிப் படிப்பினை தொடர்ந்துகொண்டிருந்தான். எனினும், மற்ற மாணவர்களுக்குக் கிடைத்த வாழ்க்;கை, தனக்குக் கிடைக்கவில்லையே என்ற வருத்தம், அவ்வப்போது அவனை 'நீ ஏழை' என்பதை நிறுத்துச் சொல்லிக்கொண்டிந்ததால், 'வாழ்ந்தெதற்கு?' என்ற கேள்வியும் இடையிடையே இதயத்தில் வந்துபோனது. வருத்தங்களை நினைத்து, நினைத்து வீட்டிற்கு வந்துபோவதையும் தவிர்த்துவந்தான் ராகுல். கல்லூரியின் கடைசி ஆண்டு, வீட்டைக்கூட காணாதபடி கண்களை மூடிக்கொண்டு, படிப்பிலேயே மூழ்கியிருந்தான் ராகுல். 

மூன்று ஆண்டுகளுக்குப் பின், காலம் ஒருவழியாக கல்லூரி வளாகத்திலிருந்து தன்னை வெளியேற்ற, வீடு வந்து சேர்ந்தான் ராகுல். வீட்டின் வாசலை நெருங்கி, உள்ளே எட்டிப்பார்த்த ராகுலிற்கு அதிர்ச்சி காத்திருந்தது. தான் பாசமாய் நேசித்த அம்மாவின் படம் சுவற்றில் மாலையுடன் தொங்கவிடப்பட்டிருக்க, பரிதாபமாய் அதன் கீழே அமர்ந்திருந்தார் அப்பா. இடிந்துபோனவனாக, 'எனக்கு ஏன் சொல்லவில்லை; அம்மாவைக் காண வந்திருப்பேனே' என்று கதறி அழுதும், அப்பாவிடமிருந்து எவ்வித பதிலுமில்லை. இந்நிலையில், குடித்து குடித்து உடலைக் கெடுத்துக்கொண்ட தந்தையையும் பறிகொடுத்தான் ராகுல். 

வாழ்க்கையே இருண்டுபோனது; நான் மட்டும் இனி இருந்தெதற்கு என்ற மனநிலையோடு மரணத்தை நோக்கி நடந்தான் ராகுல். தற்கொலை செய்துகொள்வதையே தீர்வாக்கிக்கொண்டு, தனியாக வீட்டினுள் படுத்திருந்தபோது, வாசற்கதவினைத் தட்டுகின்ற சத்தம்.... யாரென எட்டிப்பார்க்க, வெளியிலோ வெள்ளைத் தாடியுடன், நீண்டதோள் தோள் பையுடன் நின்றுகொண்டிருந்தார் ஓர் முதியவர். என்னைத் தேடி எதற்கு வந்திருக்கிறார் என்று சிந்திப்பதற்குள், கையிலிருந்த ஓர் காகிதத்தை நீட்டினார் அவர். வாங்கிக்கொண்டான் என்றாலும் வாசிக்கவோ மனதில்லை. வீட்டின் ஒரு மூலையில் அதனை வீசிவிட்டு வெளியேறினான். கடைவீதிக்குச் சென்று, விஷத்தை வாங்கிக்கொண்டு, காட்டை நோக்கி நடந்தான்.  மாலை மயங்கும் நேரம், ஆளறவமமற்ற பகுதி, கூட்டைத் தேடி பறந்துசென்றுகொண்டிருக்கும் பறவைகள்; என்றாலும், மரங்கள் ஒன்றோடு ஒன்று உரசிக்கொள்வதினால் உண்டான சத்தம், அவைகள் எதையோ பேசிக்கொள்வதுபோலத் தென்பட்டது. மரணத்தைச் சந்திக்க தனது மனதை ஆயத்தமாக்கிக்கொண்டு, வாங்கியிருந்த விஷத்தைச் சுற்றியிருந்த காகிதத்தை மெல்ல பிரித்தான் ராகுல். ஏதா அதில் எழுதியிருக்கிறதே; என்று வாசிக்கத் தொடங்கினான், 'நீ பயப்படாதே, நான் உன்னுடனே இருக்கிறேன்; திகையாதே, நான் உன் தேவன்; நான் உன்னைப் பலப்படுத்தி உனக்குச் சகாயம்பண்ணுவேன்; என் நீதியின் வலதுகரத்தினால் உன்னைத் தாங்குவேன்' (ஏசா 41:10) என்ற வசனத்தை வாசித்ததும், யாரோ ஒருவர் தன்னோடு பேசுவதை உணர்ந்தவனாக, யார்? என்ற கேள்வியோடு மரணத்தை மறந்து காலை வரை காட்டிலேயே கண்விழித்திருந்தான்.  

மறுநாள் காலை, சூரியன் தன் கதிர்களை வீசி வானத்தில் ஏறிக்கெண்டிருந்தது. காட்டிலிருந்து கால்நடையாக வீட்டை நோக்கி நடந்தான் ராகுல். வீட்டின் உள்ளே சென்றதும்; அவன் வீசியெறிந்த காகிதம் கதவண்டையிலே காலடியில் கிடந்தது; குனிந்து அதனை கையிலெடுத்து வாசித்த ராகுலுக்கு மீண்டும் அதிர்ச்சி, அதிலும், 'நீ பயப்படாதே, நான் உன்னுடனே இருக்கிறேன்; திகையாதே, நான் உன் தேவன்; நான் உன்னைப் பலப்படுத்தி உனக்குச் சகாயம்பண்ணுவேன்; என் நீதியின் வலதுகரத்தினால் உன்னைத் தாங்குவேன்' (ஏசா 41:10) என்றே எழுதியிருந்தது. தன்னுடைய வீட்டிற்கு வந்து முதியவர் கொடுத்த காகிதத்தை தான் வீசியெறிந்ததுபோல, கடைக்காரருக்கும் அந்த முதியவரே கொடுத்திருக்கக்கூடும் என்பதை அறிந்துகொண்டான் ராகுல்.  மரணத்தை நோக்கி நடந்துகொண்டிருந்த மனிதனை, வீட்டிற்கு வந்து தடுத்ததுடன், விஷம் வாங்கிய இடத்திலும் விஷத்தை சுற்றி காகிதமாக வந்து கரத்தைப் பிடித்த ஆண்டவருக்கு தனது வாழ்க்கையை அர்ப்பணித்தான். வசனத்தை விதையுங்கள்; அவைகள் ஒருபோதும் வீணாவதில்லை. வாசித்தாலும், வீசினாலும் அவை வீணாவதில்ல.

புதன், 6 அக்டோபர், 2021

காலை இழந்த கால் பந்து

 

www.sinegithan.in



தந்தை கால்பந்தாடும் அந்தக் கண்கொள்ளாக் காட்சியைப் பார்த்து பார்த்து ரசித்து, தானும் அப்பாவைப் போல கால்பந்தாட்ட வீரனாகவேண்டும் வெறி இலட்சியம் அன்பரசனுக்குள் உருவானது. குழந்தையைப்போல பத்திரமாக தந்தை வீட்டில் வைத்திருக்கும் கால்பந்தை தொட்டுப் பார்ப்பதில்தான் அவனுக்கு எத்தனை அலாதிப் பிரியம். என்றாலும், தன் கால்களால் அதனை உதைத்து விளையாடுவதற்கு அப்பா விட்டுத்தர ஆயத்தமாயிராதது அவனுக்கோ அனுதின துக்கம். பயிற்சிக்காக அப்பா புறப்படும்போதெல்லாம், உடன் செல்லவேண்டும் என்பதில் உற்சாகமாக இருந்தான். பள்ளியிலிருந்து வந்ததும், வியர்வை நிற்பதற்கு முன் வீட்டுப் பாடங்களைப் படித்துக்கொண்டே, அப்பா புறப்படுவதைக் கவனிக்க ஓரக்கண்ணுக்கும் ஒருபுறம் வேலைகொடுத்துக்கொண்டிருந்தான். தந்தை புறப்பட்டதும், 'தாங்கப்பா, மைதானம் வரை பந்தை நான் கொண்டு வருகிறேன்' என்று பந்தை வலிய வாங்கிக்கொண்டு, வழியெல்லாம் புன்சிரிப்புடன் அவன் நடக்கும் நடையால், தந்தையை அல்ல, தன்னைத்தானே கால்பந்தாட்ட வீரன் என்று அழகுபார்த்துக்கொண்டவன் அவன்.

அது வெள்ளிக்கிழமை, அப்பா மைதானத்திற்குப் புறப்பட்டார், அன்பரசனும் பந்துடன் அப்பாவோடு தொற்றிக்கொண்டான். மைதானத்தைச் சென்றடைந்ததும், வீரர்கள் அப்பாவிடம் மகன் அன்பரசனை விசாரித்ததில் இவனுக்கு ஆனந்தம். 'அப்பா' என்ற சொல் மாத்திரமல்ல 'அங்கிள்' என்ற சொல்லையும் அவ்வப்போது உச்சரிக்க அறிந்துகொண்டான். இன்னும் சில நிமிடங்களில் போட்டி தொடங்கவிருந்தது. வீரர்கள் பயிற்சியினால் தங்களை மெருகூட்டிக்கொண்டிருந்தனர். அதோ, போட்டி ஆரம்பம். தான் கையில் சுமந்துகொண்டுவந்த கால்பந்து, வீரர்களின் கால்களுக்கிடையே சிக்கிப் புரளுவதையே பார்த்துக்கொண்டிருந்தான் அன்பரசன். விரர்கள் மைதானத்திற்குள் விளையாண்டுகொண்டிருந்தபோது, அன்பரசனோ அந்தப் பந்தை மைதானத்திற்கு வெளியே எதிர்பார்த்துக்கொண்டிருந்தான். மைதானத்தை விட்டு பந்து வெளியேறும்போதெல்லாம் ஓடிச் சென்று எடுத்து, மைதானத்துக்குள் பந்தைத் தூக்கிப் போடுவதில் அந்த ஒன்பது வயதில் அவன் அனுபவித்த ஆனந்தம் அந்த வீரர்களுடன் இணைந்து விளையாடுவதற்கு ஈடாகவே இருந்தது அவனுக்கு. வீரர்களை விட்டுத் தன்னைப் பிரித்து வைத்திருக்கும் அந்த எல்லைக் கோட்டைத் தாண்டி என்றாகிலும் ஒரு நாள் உள்ளே சென்று விளையாடிவிடவேண்டும் என்ற கனவு உலகை காலால் கட்டிக்கொண்டிருந்தான். பள்ளிப் படிப்பு, ஒருபுறம் விட இயலாததாகத் தன்னைத் இறுக்கிக்கொண்டிருந்தபோதிலும், விரும்பிய விளையாட்டுக்கு ஒவ்வொரு நாளும் நேரம் கொடுக்க அவன் தவறியதில்லை. அவன் விளையாடத் தொடங்கிய மைதானத்திற்கு தெருவே முதல் எல்லை. தோழர்களைச் சேர்த்துக்கொண்டு, கால்பந்தாட்டத்தைத் தொடங்கிவிடுவான். விடுமுறை நாட்களில் தோழரிடையே பல்வேறு விளையாட்டுகள் பரிந்துரைக்கப்பட்டபோதிலும், கால்பந்தாட்டத்தை நோக்கியே அத்தனை பேரின் கவனத்தையும் திருப்பிக்கொண்டிருந்தான்.

அது ஓர் பண்டிகைக் காலம், ஊரில் அக்கம் பக்கத்தில் உள்ள அத்தனை வீடுகளுக்கும் உறவினர்கள் வந்துகொண்டிருந்தார்கள். விடிந்தால் விவசாயம் அடைந்தால் வீடு என்று அமைதியாயிருந்த வீட்டாரெல்லாம் சுற்றத்தார் வந்துவிட்டதால் சூறாவளியைப் போல சுழன்றுகொண்டிருந்தனர். பண்டிகை, பண்டங்கள் என உறவினர்களின் வருகை சந்தோஷத்தைக் கொடுத்தபோதிலும், உறவினரை உபசரிக்க பெற்றோர்கள் விடுக்கும் எடுபிடி வேலையினை எரிச்சலாகவும் களிப்புக்கு இடையே களையாகவும் நினைத்துக்கொண்டிருந்தனர் சிறுவர்கள். அன்பரசனின் வீட்டிலும் அந்த நிலைதான். 'கொஞ்ச நேரம்மா, விளையாண்டுட்டு உடனே வந்துடுரேன்' என்று அன்பரசன் அம்மாவிடம் கெஞ்ச, அம்மாவோ, 'நாளைக்கு மாமா வர்றாங்கடா, இந்தா அரிசியும் உளுந்தும், உள்ள வெந்தயமும் போட்டுருக்கேன், கடைக்கு போயி இட்லிக்கு மாவு அரைச்சிட்டு வந்துருடா, பாதையில பாத்துப் போ, வண்டி கிண்டி வரும், அரிசியில தூசி விழுந்திராம, இடறி விழுந்து கொட்டிராம பதனமா நடந்து போ' என்று அனுப்ப, திருநாள் அன்று அன்பரசனின் நிலையோ திண்டாட்டத்திற்குள்ளாகிக்கொண்டிருந்தது.

அடுத்த நாள் காலை, விடிவதற்குள் வீட்டை யாரோ தட்டும் சத்தம்? அன்பரசு, எந்திரிச்சு போய் யாருன்னு பாருடா செல்லம்? என்று அம்மா ஏவ, உறக்கத்தில் உதடுகளைப் பிளந்து கொட்டாவி விட்டுக்கொண்டே கதவைப் பார்த்து நடந்தான் அன்பரசன். கதவைத் திறந்ததும், கிழக்கிலிருந்து அவன் கண்ணில் விழுந்த சூரிய ஒளி முன்னே நின்ற மனிதனைக் காணக்கூடாதபடி கண்னைக் கூசச் செய்தது. தலையைக் குனிந்த அன்பரசனுக்கு ஓர் அதிர்ச்சி; ஆம், ஓர் அழகிய கால்பந்துடன் அன்பரசனின் மாமா வீட்டு வாசலுக்கு வெளியே நின்றுகொண்டிருந்தார். மாமா கையில் வைத்திருந்த கால்பந்தையே பார்த்துக்கொண்டிருந்த அன்பரசனின் கண்கள், மாமாவின் முகத்தைப் பார்க்க மறந்ததில் தவறிருப்பதாகத் தோன்றவில்லை. வணக்கம் சொல்லி, உள்ள வாங்க மாமான்னு கூப்பிடக் கூட மறந்தவனாக பந்தையே பார்த்து அன்பரசன் மலைத்து நின்றுகொண்டிருக்க, சில வினாடிகளில், 'யாருடா வந்திருக்கா அன்பரசு?' என்று அம்மாவின் குரல் ஒலிக்க, 'நான்தான் அக்கா வந்திருக்கேன்' என்று மாமாவே தன்னை அன்பரசின் அம்மாவிடம் அறிமுகப்படுத்திக்கொண்டார். உடன்பிறப்பின் குரலைக் கேட்டதும், உறங்கிய இடத்திலிருந்து எழுந்து ஓடி கரம்பிடித்து இழுத்துவந்து வீட்டிலுள் நாற்காலியில் அமர்த்தினாள் அம்பரசனின் அம்மா. குடும்பக் கதைகளும், குசல விசாரிப்புகளும் தொடர்ந்தது. அக்காவுக்கும், தம்பிக்கும் பாசம் பொங்கி வழிந்துகொண்டிருக்க, அன்பரசனின் பாசமோ பந்திலேதான் ஒளிந்துகொண்டிருந்தது. 'ஏடா அன்பரசு, வா, இந்தா, இந்தப் பந்து உனக்குத்தான்' என்று தன் கையிலிருந்த கால் பந்தை அன்பரசின் கைகளில் கொடுத்த அந்நிமிடத்தில், மாமாவின் மேல் அவனுக்கு அன்பு ஊற்றெடுத்தோடியது. பந்துதான் அன்பரசனின் பண்டிகை தனக்கென கிடைத்துவிட்ட அந்தப் பந்தை தனது தோழனாக்கி, தந்தையின் தோள் வரை தான் வளருவதற்குள் தன்னை வீரனாக அடையாளப்படுத்திக்கொண்டான் அன்பரசன்.

தந்தையின் விளையாட்டு ரகசியங்கள் பலவற்றைக் காதுகளில் கேட்டவன் அவன். வீரன் ஒருவன் தன்னைப் போல தன் மகனையும் வீரனாகப் பார்க்கவேண்டும் என்ற விருப்பம் உண்மையாதுதானே. பள்ளியில் சக மாணவர்களோடு தனது கால்பந்தாட்டத்தைத் தொடங்கினான், கல்லூரியிலும், கால்பந்தே அவனுக்கு இடம் வாங்கிக் கொடுத்தது. கல்லூரியின் இறுதியாண்டு விளிம்பில் இருந்த அவனுக்கு வேலையும் காத்திருந்தது. இன்னும் இரண்டே மாதங்கள்; தேசிய அளவில் நடைபெறவிருக்கும் கால்பந்தாட்டப் போட்டியில் வீரனாகக் களமிறங்க தன்னை ஆயத்தமாக்கிக்கொண்டிருந்தான் அன்பரசன்.

அது ஒரு மாலைப் பொழுது, சுமார் ஐந்தே முக்கால் மணி, மேல் வானத்தில் சூரியன் விடைபெற்றுக்கொண்டிருந்தது. அன்பரசனோ, கால்கள் நொண்டியவாறு வீடு நோக்கி நடந்துவந்துகொண்டிருந்தான். என்னடா அன்பரசு என்று அம்மா கேட்க, 'கால் கொஞ்சம் வலிக்குதும்மா' என்ற பதிலுடன் படுக்கையில் படுத்தான். எண்ணெய் விட்டு பிள்ளையின் காலை நீவிவிட்டாள் தாய். வேளை கடந்தும் வேதனையோ தொடர்ந்தது. தன்னைப் பார்க்கவந்த தோழனிடம் அடுத்த நாள், கல்லூரிக்கு விடுப்பு எடுதிக்கொடுத்துவிட்டான். மருத்துவனைக்கு அழைத்துச் சென்றார் தந்தை. இரண்டு நாள் படுக்கையில் இருந்த அவனது மனதோ, தேசிய விளையாட்டுப் போட்டியையே நினைத்துக்கொண்டேயிருந்தது. கண்களை மூடியவனாக, உறங்காமல், மனதால் மைதானத்தில் பயிற்சி எடுத்துக்கொண்டிருந்தான். காலடியிலோ தந்தை அமர்ந்து காலை தடவிக்கொண்டிருந்தார். அறையைத் தட்டும் சத்தம், மருத்துவர் உள்ளே நுழைந்ததைக் கண்டதும், அன்பரசனின் தந்தை எழுந்து நிற்க, மருத்துவரோ, அறையின் ஒரு மூலைக்கு தந்தையை அழைத்துச் சென்று, ஏதோ கூறியவாறு தென்பட்டது அன்பரசனுக்கு. மறுகணம் தந்தை மயங்கி கீழே விழுந்து கிடந்தார். என்னவென்று புரியாமல் அன்பரசன் திகைக்க, தந்தைக்கான சிகிச்சை தொடங்கியது. சிகிச்சை முடிந்து இரு கரங்களால் இருகண்களையும் பொத்தியவாறு, கண்ணீர் கரங்களுக்கிடையே வழிந்தோடிவாறு அன்பரசன் படுத்திருந்த அறையினுள் நுழைந்தார் அன்பரசனின் தந்தை. 'அப்பா, என்னாச்சிப்பா, நல்லா இருக்கீங்களா? என்று தந்தையின் மேல் அன்பரசனுக்கு இருக்கும் கரிசனை வெளிப்பட்டது. மருத்துவர் என்ன சொன்னார்? என்ற கேள்விக்கு அடுத்த நாள் நடைபெறவிருந்த அறுவை சிகிச்சை வரை அப்பா பதில் சொல்லவேயில்லை.

மறுநாள் காலை, 10.20 மணி அன்பரசனை செவிலியர்கள் அறுவை சிகிச்சைக்காக அழைத்துச் சென்றனர். ஏதோ, மருத்துவம் என்றுதான் நினைத்துக்கொண்டிருந்தான் அன்பரசன், அதற்குள் அவனுக்கு மயக்க மருந்து செலுத்தப்பட்டதால் மரத்துப்போனான். அவனது வலது காலில் முழங்காலுக்குக் கீழான பகுதியை மரத்தைப் போல அறுத்தெடுத்தார் மருத்துவர். என்றோ காலில் ஏற்பட்ட சிறு காயத்தைக் கவனிக்காமல், விளையாடுவதிலேயே கவனமாயிருந்ததினால், இலக்கை அடையக் காரணமான காலுக்கே அக்காயம் உலைவைத்துவிட்டது. நினைவு திரும்பாமல், படுக்கைக்குத் திரும்பினான். சுமார் 8 மணி நேரம் கழித்து மெல்லக் கண் விழித்தான். அப்பா அருகில் இருந்தார். அவனது கண்கள், கால்களைப் பார்த்துவிட்டால், என்ன ஆகுமோ என்று வலக்காலை ஒட்டியவாறு மறைத்து உட்கார்ந்திருந்தார் தந்தை. அறுத்தெடுக்கப்பட்ட தன் மகனின் கால், தான் வீட்டில் வைத்திருந்த பந்தை ஒருமுறையேனும் ஆசையாக உதைக்கவில்லையே என்று தந்தையின் உள்ளம் உடைந்திருந்தது. மகனின் உள்ளம் உடையும் முன்னதாக, உடைந்த உள்ளத்தோடு உட்கார்ந்திருந்ததால், தந்தையைத் தேற்றும் நிலைக்கு அன்பரசன் தன்னைத் தள்ளிக்கொண்டான்.

தேசிய விளையாட்டுப் போட்டி அன்று, அன்பரசனோ மைதானத்திற்குள் அல்ல அரங்கத்தில் பார்வையாளனாக அமர்ந்திருந்தான்; மனமோ மைதானத்துக்குள்ளே இருந்தது. கல்லூரி வரை தன்னைக் கொண்டுவந்த கால்பந்து, மைதானத்திற்குத் தன்னைக் கூட்டிச் செல்லவில்லையே என்ற கண்ணீர் அவனது கன்னத்தை நனைத்தது. ஒரு காலை இழந்து, கால்பந்து மைதானத்தில் அங்கும் இங்கும் உருண்டுகொண்டிருந்தது.

நண்பர்களே! வாழ்க்கையில் எது எவ்வளவு தூரம் வரும் என்பதை அறியாதவர்கள் நீங்கள். இலக்கை அடைவதற்குள், இருப்பதை இழக்க நேரிடலாம்; கால்களை இழந்தாலும், நீ மைதானத்தில் இருக்கவேண்டிய கால் பந்து என்பதை மறந்துவிடாதே. 'விளையும் பயிர் முளையிலேயே' என்பது பழமொழி, முளையே கிள்ளியெறியப்பட்டாலும், நீ மூலையில் இருக்கவேண்டியவன் அல்ல; விதையிலும் வாழவேண்டியவன்.

கிறிஸ்து இயேசுவுக்குள் தேவன் அழைத்த பரம அழைப்பின் பந்தயப்பொருளுக்காக இலக்கை நோக்கித் தொடருகிறேன் (பிலி 3:14) என்பதே வாய் மொழியாயிருக்கட்டும்.

தனவதி

 

தனவதி

 www.sinegithan.in

                       


                       

அது ஒரு மாலை நேரம். காட்டுப் புறத்தில் தன்னைத் தானே காப்பாகக் கொண்டு அமைந்திருந்தது அந்தத் தனி வீடு. எட்டிக் கூப்பிடும் தூரத்திலும், எட்டிப் பார்க்கும் தொலைவிலும் வீடுகள் வேறேதும் இல்லாத நிலையில் அமைதியில் துயிலுறங்கிக்கொண்டிருந்தது. சாலைகளில் ஓடும் வண்டிகளின் சத்தம், பயணிகளின் அலசடி, கடைத்தெரு வீதிகளின் சலசலப்பு என அத்தனைக்கும் தன்னை விதிவிலக்காக்கிக் கட்டப்பட்டிருந்தது.

அந்நிய நாட்டிற்கு அன்று அடிமைப்பட்டிருந்தாலும், அந்நியர் வியக்கும் வீட்டின் விதிகளைக் கொண்டது இந்தியா என்பதற்கு அடையாளமாக வாழ்ந்துகொண்டிருந்தாள் தனவதி. மெலிந்த உருவம், எண்பத்து ஒன்பது வயதினைத் தாண்டி தொண்ணுரைத் தொடும் நாள் அது. அன்று காலைப் பொழுதில், நான்கரை மணிக்கெல்லாம் விழிப்புத் தட்டியது. உறக்கத்தைக் களைந்து, வீட்டு வேலைகளைத் தொடங்க இன்னுஞ் கொஞ்சம் நேரமாகட்டுமே என கட்டிலில் படுத்தே கிடந்தாள். பொழுது விடியும் வரைப் பொறுமையாயிருக்க அவளது மனது பொறுத்துக்கொள்ளவில்லை. கிராமத்தில் பிறந்து வளர்ந்தவள், கருக்கலில் எழுந்து வீட்டு வேலைகளைச் செய்யத் தாயினால் பழக்கப்படுத்தப்பட்டவள். பிறந்த வீட்டிலிருந்து புகுந்த வீடு வந்தபோதும் அந்தப் பழக்கத்தை தனது தனித்தன்மையாகக் காத்துவந்தவள் தனவதி. பிறந்த வீட்டிலிருந்து புருஷனோடு வாழ தனிக்குடித்தனம் போனபோதிலும், அப்பழக்கத்திற்கு அவள் அடிமைப்பட்டவள்;. ஒண்டியாருந்தாலும் ஒழுக்கத்தைத் தனவதி தக்கவைத்துக்கொண்டிருந்தாள். வட்டில் விளக்க குளித்துவிட்டு அன்றைய தினத்தைத் துவக்கும்படி ஆயத்தமானாள் தனவதி. உதவிக்கென்று வீட்டில் யாருமில்லை. மண் தரையில் வைக்கப்பட்டிருந்த மண்ணெண்ணை விளக்கை அணைக்கக் குனிந்தாள். அதற்கு மேலே ஒரு ஆணியில் அவளது கணவனின் புகைப்படம் தொங்கிக்கொண்டிருந்தது. விளக்கை வாயினால் ஊதி அணைக்கக் குணிந்த தனவதியின் தலையில் ஆணியில் தொங்கிக்கொண்டிருந்த அந்த புகைப்படம் உதிர்ந்தது. கணவனின் படம் தலையில் விழ, வழி எடுத்தாலும், புருஷனின் புகைப்படைத்தை தலையில் விழுந்த பூவாகத்தான் அவளது மனது நினைத்தது. சட்டென கணவனைப் பற்றிய நினைவு அவளுக்கு.

தன்னை நேசித்த வாலிபன் ஒருவனின் அன்புக்கு தன்னைப் பறிகொடுத்து, பெற்றோர் வற்புறுத்தியும் பிடிவாதத்தினால் அவனையேக் கைப்பிடித்து வாழ்ந்தவள் தனவதி. திருமணமாகி இருபத்திரெண்டாம் நாள் இல்லத்தை விட்டு இராணுவப் பணிக்குச் சென்றான் கணவன். வாய் நிறையப் புண்னகையோடு போய்வாங்க என மனதில்லையென்றாலும், விடை கொடுத்து அனுப்பினாள். பணிக்குச் சென்ற பதினைந்தாம் மாதம் அன்று தீடீரென தனவதியினை அருகாமையிலிருந்த அரசு அலுவலகத்தின் அதிகாரி இருவர் தேடி வந்தனர். வீட்டு வாசலில் வந்து மௌமாக நின்றுகொண்டிருந்த அவர்களை யாரென்று அறியாமல் ஏற இறங்க பார்த்து திகைத்துப் போனாள் தனவதி. ஏனென்றால் அவளைத் தேடி உதவிக் கென்று கூட யாரும் இதுவரை வந்ததில்லை. வந்தவர்களை வீதியில் நிறுத்தாமல், வீட்டிடை ஒட்டி வெளியே கட்டப்பட்டிருந்த மண் திண்ணையில் தேடி வந்த அதிகாரிகளை உட்காரச் சொல்லிவிட்டு, தாய் தன்னைப் பழக்கப்படுத்தியபடியே, அவர்களிடத்தில் செய்தியைக் கூட கேட்காமல், விவரம் ஏதும் அறியாமல், வீட்டுக்கு உள்ளே ஓடி இரண்டு செம்புகள் நிறைய தண்ணீர் மொண்டு வந்து கொடுத்தாள். வந்தவர்களோ நின்றுகொண்டேயிருந்தார்கள், தண்ணீரைக் குடிக்கக் கொடுத்தும், குடிக்க மனதில்லாமல் தன்னையே அவர்கள் பார்த்துக்கொண்டிருப்பதைக் கண்டு பதபதைத்தாள் தனவதி. வந்த விசயம் என்ன? என்று தனவதி கேட்கும் முன்னே, வந்தவர்களின் வாயிலிருந்து விசயம் வெளிவந்தது, அது தவதிக்கு விசச் செய்தி. உனது கணவன் போரில் வீர மரணம் அடைந்துவிட்டார் என்ற செய்தியே அது. அதிகாரிகளின் செய்தியினைத் தொடர்ந்து, இரண்டு தினங்களில் விமானத்தில் வந்தடைந்தது கணவனது உடல், ஒப்படைக்க அதிகாரிகள் வருவது அறிவிக்கப்பட்டு, வாசலுக்கு வெளியிலேயே காத்துக் கிடந்தாள். விபரம் அறியாமல் அன்று இரண்டு செம்புகளில் தண்ணீர் கொடுத்த தனவதி, இரண்டு கண்களிலும் கண்ணீரோடு கணவனின் உடலை அதிகாரிகளின் கையிலிருந்து வாங்கிக்கொண்டாள்.

அருகாமையிலிருந்த கிராமத்தினர் அனைவரும் புடைசூழ வந்தனர். துப்பாக்கியுடன் அநேக இராணுவ வீரர்கள் கணவனது உடலைச் சூழ்ந்து நின்றனர். வேடிக்கை பார்த்தோர் ஒரு பக்கம், ஆனால் தனவதியின் மனதோ வேதனையின் பக்கம். கூட்டத்தின் நடுவே தனது தாயும் தகப்பனும் நிற்பதையும் அவளது கண்கள் கண்டன. அரசு வண்டிகள் பல வர, அரசாங்கச் செலவில் அத்தனை ஏற்பாடுகளும் செய்யப்பட, மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.மதிவாணனும் தனவதியின் வீட்டில் ஒழுங்குகளைக் கவனித்துக்கொண்டிருந்தார். கணவனின் பிணத்துக்கு முன்னே அவள் நின்றது அவளும் இராணுவப்படையில் அங்கம் என்பதைப் போன்ற எண்ணத்தையே சூழ்ந்து நின்றோரின் நினைவலையில் சுற்றிவந்தது. போர்த்திக்கொண்ட போர்வையையே போரில் பறிகொடுத்துவிட்டு அவள் நின்றுகொண்டிருந்த காட்சி அங்கு நின்ற வீரர்களின் வீரத்தையும் கலைத்தது. இத்தனைக்கும் மத்தியில், அரசு மரியாதையுடன் வீட்டை விட்டு தனது கணவனின் இறுதி ஊர்வலம் புறப்பட, தனவதியும் புதைக்கும் இடம் வரைச் சென்று கணவனுக்கு விடைகொடுத்துவிட்டு வீட்டுக்கு வந்து சேர்ந்தாள். தான் நம்பியிருந்த, கணவனையும் தரைக்குத் தாரை வார்த்துவிட்டுத் தனியாகவே வாழ்ந்தாள் தனவதி. அப்போது அவளுக்கு வயது இருபத்து மூன்று. கணவன் பிணமானபின்னும், கணவன் இறந்ததற்கான அரசு உதவிப் பணம் அவளை மாதாமாதம் தேடி வந்ததால், தனது வாழ்க்கையைக் கழித்துக்கொண்டிருந்தாள். கணவன் இறந்தபோதிலும், மறுமணம் செய்யாமலேயே வாழ்க்கையை கடத்தினாள்.

கணவனது புகைப்படம் தனது தலையின் மேல் விழுந்தபோது, இத்தனை நினைவுகளும் அலையலையாய் அவளது நினைவில் வந்து சென்றன. அந்தப் புயலில் அவளது மனம் சிக்கித் தவித்தது. பாசத்துக்கு அவள் பாடப்புத்தகம், அவளைத் தேடி தாய் வர மறந்தாலும், குருவிகள், நாய்கள், பூனைகள் என பல விலங்குகள் அவளுக்குச் சொந்தக்காரர்களாகி தினந்தினம் அவளைத் தேடி வந்தன. அவைகளுக்காக இவளும், இவளுக்காக அவைகளும் காத்திருந்த காட்சி, இறைவன் அமைத்துக்கொடுத்த பந்தம், அதிலே சற்று கிடைத்தது அவளுக்கு ஆனந்தம்.

தொட்டில் பழக்கத்தை சுடுகாடு மட்டும் கொண்டு சென்றாள் தனவதி, ஆனால், அவளது வீட்டில் தொட்டில் ஆடாது போயிற்று. தொட்டிலில் ஆட்டியவர்களும் அவளைத் தேடாது மறந்துவிட்டனர். சொத்தை விட்டுச் சென்ற புருஷன் அவளது வயிற்றில் வித்தை விட்டுச் செல்லாது போனான். வித்தில்லையானாலும் விதவையாய், வயதாகி அந்த வீட்டைத் தனது இறுதியாக்கி யாரும் துணைக்கில்லாதவளாக, தனியாகவே உயிர் நீத்தாள், இருபத்து மூன்றே வயது, மற்றொருவனுடன் வாழ வயதிருந்தபோதிலும், தொண்ணூற்றொன்று ஒன்பது வயதுவரை வாழ்ந்து தரைக்குச் சொந்தமானாள் தனவதி. அனாதையாய் இறந்து கிடந்த அவளையும் அரசாங்கமே அடக்கம் செய்தது. இறந்தது கூட தெரியாமல் வாழ்ந்த அவர்களது பெற்றோர்களால் அவள் இறுதி மூச்சு விடுவதைப் பார்க்க முடியாமல் போயிற்று. காதலித்து அவள் கட்டிய கணவனுக்காக கண்களை அடைத்துக்கொண்டு, பெற்றவர்களே அவளை அனாதையாக்கியிருந்தனர். பலமுறை பெற்றோரைத் தேடிச் சென்றபோதிலும், 'போடி' என்று விரட்டியடித்த அவர்களால் வாடிப்போய் வாழ்ந்தாள் அவள். தவறு செய்துவிட்டேன் என்ற நினைவு அவளுக்கு. முடிச்சு போட்டதற்குப் பின், கணவனும் முடிந்துபோனதற்குப் பின் தான் திருந்திவிட்டதை பெற்றோருக்கு காட்டியும் அர்த்தமில்லையே. காதலுக்கு எதிரான வைராக்கியம் பெற்றோருக்கு, தனவதி கணவனை இழந்த பின்னும் அவளை வாழவைக்க மனதற்றவர்களாகிப்போயிருந்தார்கள். தவறிப்போய்விட்டாலும் பிள்ளை என ஒரே மகளை ஏற்றுக்கொள்ள மனதற்ற தனவதியின் தாயை, உலகம் பிள்ளை பெற்ற மலடியாகவே பார்த்தது. விட்டுக்கொடுக்காததால் உறவு பட்டுப்போனது. கணவன் இழந்த விதவை, பெற்றோரிருந்தும் அனாதை தனவதியின் நிலை இது. கருவறை கொடுத்தவர்கள் மறந்துவிட்ட அவளை கல்லறை இடம் கொடுத்து ஏற்றுக்கொண்டது.

மனதைக் கொடுத்து மனிதனை வாங்கி
மனிதனை இழந்து மனது வீங்கி
பெற்றவரையும் பிள்ளையற்றவராக்கி
பிள்ளையானாலும் பெற்றோரற்று
மற்றோர்க்கு முன் மரணம் 
இது காதலில் தனவதிக்குக் கிடைத்த சன்மானம். 

நிஜமாகாத நிழல்

 

நிஜமாகாத நிழல்

 www.sinegithan.in

                                                                             


 

அப்பா அன்று திட்டிய வார்த்தையினை ரவியினால் பொறுத்துக்கொள்ளவே முடியவில்லை. அப்போது அவனுக்கு பதினேழு வயதுதான் என்றபோதிலும், தான் செய்த ஒரு சிறிய தவறுதலுக்காக இப்படி தன்னை தனது நண்பர்கள் அறிய அத்தனை உரத்தக் குரலில் ஊரறிய தந்தை உறுமிக்கொண்டிருக்கிறாரே என ரவி பொறுமிக்கொண்டிருந்தான். ஆற்றிற்குச் சென்று குளிக்கக்கூடாது என்ற அப்பாவின் கட்டளையினை மீறியதால் வந்த விளைவினை தண்டணையாக அனுபவித்துக்கொண்டிருந்தான் ரவி. ஒரு புறம் தந்தை அடிக்கும் அடிகளைச் சகித்துக்கொண்டிருக்க அவனுக்கு பெலனிருந்தபோதிலும், அதனை நண்பர்கள் பார்க்கின்றதை அவனால் சகிக்க முடியவில்லை. உடன் பிறந்த சகோதரர்களும் அப்பாவின் கைக்குத் தன்னைத் தப்புவிக்காமல், தன்னைப் பார்த்து ரசித்துக்கொண்டிருக்கின்றனரே என்ற வெறுப்பும் அவனுக்குள் நெருப்பாய் கிளம்பியது. அப்போது ஓடிவந்தாள் அவனது மூத்த தமக்கை, 'போதும் விடுங்க, ஏதோ ஒரு நாள் தெரியாம ஆத்துல குளிக்கப் போயிட்டான், இனிம போக மாட்டான்' என்று அப்பாவிடம் அவள் பேசியபோது சற்று அடங்கியது அவன் கோபக் கனல். 

அப்பாவிற்குப் பயந்து தண்டனையை அனுபவித்துக்கொண்டு வீட்டு முற்றத்தில் நின்றுகொண்டிருந்த ரவியின் மனது சிறகடித்து தன்னோடு சேர்ந்து ஆற்றிற்கு வந்த நண்பர்களின் வீட்டிற்குப் பயணமானது. அவனது வீட்டிற்கு அருகாமையில் உள்ள ஒரு நண்பனும் இவனோடு சேர்ந்து அதே ஆற்றில் குளித்தவன், என்றபோதிலும் அவனது தந்தை அவனைத் தண்டிக்காததைக் கண்டு இடிந்துபோயிருந்தான் ரவி. ஏன் எனது தந்தை மட்டும் என்னைத் தண்டிக்கின்றார்? என்ற கேள்விக்கு விடை தெரியாமல் திணறிக்கொண்டிருந்தது அவனது மூளை. நான் அந்தக் குடும்பத்தில் மகனாகப் பிறந்திருந்தால் எத்தனை நலமாக இருந்திருக்கும் என நிஜமாகாத நிழலைக் கனவாகக் கண்டு நொந்துகொண்டிருந்தான் ரவி. ஒரு குற்றம் செய்ததற்காக, தான் முன்னே செய்த எத்தனையோ குற்றங்களை ஞாபகப்படுத்தி ஞாபகப்படுத்தி தந்தை எரிந்து விழுவதைக் கண்டு ரவியின் மனது முறிந்துகொண்டிருந்தது. குடும்பத்தின் மேல் கோபமுற்று வெளிNயினால் மட்டுமே விடுதலை என்ற முடிவினை எடுத்தான் ரவி. 

அது ஒரு மாலை நேரம், தனது தெருவில் ஆலய மணி ஒலித்துக்கொண்டிருந்தது, ரவியின் தாய் மாலை ஆராதனைக்கு ஆயத்தமாகிக்கொண்டிருந்தார். 'கோயிலுக்கு வரலியா?' என்ற தாயின் கேள்விக்கு 'போம்மா வாரேன்' என்று சாதுரியமாகப் பதில் பேசி தப்பிக்கொண்ட ரவி, அந்த நேரத்தில் வீட்டிற்கு விடைகொடுத்துவிட்டு பயணமானான். எப்படியோ கையில் கிடைத்த காசு கொஞ்சம், அதனை ஒரு துணிப்பையில் பத்திரமாய் பொதிந்து வைத்துக்கொண்டு வெளியேறினான் வீட்டைவிட்டு. வழியில் அவனைக் கண்ட முதியவர் ஒருவர், அவனிடம் 'தம்பி எங்க போற, வீட்ல சொல்லிட்டுத்தான் போறியா?' என குறுக்கிட்டபோது, சினம் வந்தபோதிலும் சிரித்து மழுப்பிக்கொண்டு பேருந்து நிலயத்தை அடைந்தான் ரவி. எங்கு போவது? என்ன செய்வது? என அறியாமல் வெறுமையாய் இருந்தது ரவியின் மனது. எதை எதையோ நினைத்துக்கொண்டு இரவு பேருந்து நிலையத்தை அடைந்த ரவி; அங்கும் என்ன செய்வது என அறியாதவனாய் தொடர்ந்து பயணிக்க விரும்பி, எப்படியோ ஒரு சுற்றுலா ஸ்தலத்தைச் சென்றடைந்தான். இரவு நேரம், குளிர் ஒருபுறம், எங்கு தங்குவது, யார் துணை என்ற கேள்விகளுக்கெல்லாம் பதில் கிடைக்காதவனாக உறக்கத்தில் உலாத்திக்கொண்டிருந்த அவனது மனது அமைதியை இழந்தது. உடலில் உதறல், உள்ளத்தில் உளரல்; இனி மீண்டும் வீட்டுக்குப் போகனுமா? என்று அவனே தன் மனதில் கேட்டுக்கொண்டு 'வேண்டாம்' என பதிலும் சொல்லிக்கொண்டான். 

அப்படி என்றால் என்ன செய்வது என தன்னிடமே அவன் கேட்டக் கேள்விக்கு, 'தற்கொலை செய்துகொள்' என்ற பதிலையே அவனது மனது ரீங்கரித்துக்கொண்டிருந்தது. கையில் வைத்திருந்த துணிப்பையினை அருகாமையில் உள்ள ஒரு மரத்தில் தொங்கவிட்டுவிட்டு, தற்கொலைக்கு ஆயத்தமானான் ரவி. தகப்பன் தனக்குக் கொடுத்த சிறிய தண்டணைக்காக, தனக்குத் தானே இத்தனை பெரிய தண்டணையை கொடுக்கவேண்டுமா என்பதையெல்லாம் நினைக்க அவன்கு கணங்கள் இல்லை. தூக்கு மேடை கைதியைப் போலை தன்னையே அதில் ஏற்றிக்கொள்ள ஆயத்தமாகிக்கொண்டு, துக்கத்தோடு இருந்த ரவியை தூக்கம் தாலாட்டி தூங்கவைத்தது, தன்னையும் அறியாமல் தூங்கிக்கொண்டிருந்தான் ரவி. காலை 7 மணி; சூரியக் கதிர் தன் மேல் பட எழுந்துகொண்ட அவன் திடுக்கிட்டான்; 'நான் சாகனும் என்றுதானே வந்தேன், எப்படி தூங்கினேன்' என்று விழித்த அவனது கண்களுக்கு முன்னால், சுற்றுலாப் பயணிகளின் கூட்டம் பட்டது. உல்லாசமாய், ஜோடியாய், குடும்பமாய், குழந்தைகளுடன் வந்த மக்களைக் கண்ட ரவி தனிமையை உணர்ந்தான். தனது தவற்றினை உணர்ந்து, வீட்டை நோக்கிப் பயணமானான் ரவி; வழியில் பழங்கால ஆலயம் ஒன்றின் படியில் அவனது கால்கள் முழங்காலிட்டது. மனம் இறைவனை நோக்கிப் பார்த்தது, மௌனம் சற்று நேரம் நீடித்தது, அவனது வாழ்க்கையின் கருமேகங்களெல்லாம் கண்ணீராய் பொழிந்துகொண்டிருந்தது. ஆனால் அவனது மனதோ அமைதி அடைந்தது. பூட்டிய ஆலயத்தின் வெளியே நின்றிருந்தாலும் ரவியின் மனதிற்குள் இறைவன் நுழைந்திருந்தார். ரவி தற்கொலை செய்துகொள்ளவில்லை ஆனால், இறைவனின் சந்நிதியில் தன்னைக் கொலை செய்திருந்தான். அன்று அவனுக்குப் பிறந்த நாள். சாவு அவனுக்கு நிஜமாகாமல் நிழலானது. தன்னைக் காப்பாற்றியது இயற்கையான தூக்கமல்ல இறைவன் என்பதை உணர்ந்த அவனது வாழ்க்கை சூரியனைப் போல பிரகாசமானது. 

இடிந்து போனதற்காக இடித்துக்கொள்வதும்

அடிக்கப்பட்டதற்காக அழித்துக்கொள்வதும்

துக்கத்தை மறக்கத் தூக்கில் தொங்குவதும்

கண்ணீருக்கு விடையாய் கல்லறையை நினைப்பதும் ஏன்? 

வல்லவரை நினைத்து வா! அவர் வாழவைப்பார்.