Skip to main content

வசனம் வீணாவதில்லை

 வசனம் வீணாவதில்லை

www.sinegithan.in


கல்லூரி வகுப்புகள் முடிந்ததும், விடுதியை நோக்கி நடந்துகொண்டிருந்தான் ராகுல்; வீட்டை விட்டு தூரமாயிருந்ததால், வீட்டின் நினைவுகள் அவ்வப்போது அவனை வாட்டியெடுத்தன. ஒருபுறம் வீட்டில் வியாதிப்படுக்கையில் இருக்கும் தாய், மற்றொருபுறம் குடித்துவிட்டு குடும்பத்தினைக் குறித்து கவலையற்று வாழும் தந்தை. வறுமையின் நிமித்தம் உறவினர்களும் தனக்குத் தூரமாயிருக்கும் சூழ்நிலை. நண்பர்களது உதவியுடன் கல்லூரிப் படிப்பினை தொடர்ந்துகொண்டிருந்தான். எனினும், மற்ற மாணவர்களுக்குக் கிடைத்த வாழ்க்;கை, தனக்குக் கிடைக்கவில்லையே என்ற வருத்தம், அவ்வப்போது அவனை 'நீ ஏழை' என்பதை நிறுத்துச் சொல்லிக்கொண்டிந்ததால், 'வாழ்ந்தெதற்கு?' என்ற கேள்வியும் இடையிடையே இதயத்தில் வந்துபோனது. வருத்தங்களை நினைத்து, நினைத்து வீட்டிற்கு வந்துபோவதையும் தவிர்த்துவந்தான் ராகுல். கல்லூரியின் கடைசி ஆண்டு, வீட்டைக்கூட காணாதபடி கண்களை மூடிக்கொண்டு, படிப்பிலேயே மூழ்கியிருந்தான் ராகுல். 

மூன்று ஆண்டுகளுக்குப் பின், காலம் ஒருவழியாக கல்லூரி வளாகத்திலிருந்து தன்னை வெளியேற்ற, வீடு வந்து சேர்ந்தான் ராகுல். வீட்டின் வாசலை நெருங்கி, உள்ளே எட்டிப்பார்த்த ராகுலிற்கு அதிர்ச்சி காத்திருந்தது. தான் பாசமாய் நேசித்த அம்மாவின் படம் சுவற்றில் மாலையுடன் தொங்கவிடப்பட்டிருக்க, பரிதாபமாய் அதன் கீழே அமர்ந்திருந்தார் அப்பா. இடிந்துபோனவனாக, 'எனக்கு ஏன் சொல்லவில்லை; அம்மாவைக் காண வந்திருப்பேனே' என்று கதறி அழுதும், அப்பாவிடமிருந்து எவ்வித பதிலுமில்லை. இந்நிலையில், குடித்து குடித்து உடலைக் கெடுத்துக்கொண்ட தந்தையையும் பறிகொடுத்தான் ராகுல். 

வாழ்க்கையே இருண்டுபோனது; நான் மட்டும் இனி இருந்தெதற்கு என்ற மனநிலையோடு மரணத்தை நோக்கி நடந்தான் ராகுல். தற்கொலை செய்துகொள்வதையே தீர்வாக்கிக்கொண்டு, தனியாக வீட்டினுள் படுத்திருந்தபோது, வாசற்கதவினைத் தட்டுகின்ற சத்தம்.... யாரென எட்டிப்பார்க்க, வெளியிலோ வெள்ளைத் தாடியுடன், நீண்டதோள் தோள் பையுடன் நின்றுகொண்டிருந்தார் ஓர் முதியவர். என்னைத் தேடி எதற்கு வந்திருக்கிறார் என்று சிந்திப்பதற்குள், கையிலிருந்த ஓர் காகிதத்தை நீட்டினார் அவர். வாங்கிக்கொண்டான் என்றாலும் வாசிக்கவோ மனதில்லை. வீட்டின் ஒரு மூலையில் அதனை வீசிவிட்டு வெளியேறினான். கடைவீதிக்குச் சென்று, விஷத்தை வாங்கிக்கொண்டு, காட்டை நோக்கி நடந்தான்.  மாலை மயங்கும் நேரம், ஆளறவமமற்ற பகுதி, கூட்டைத் தேடி பறந்துசென்றுகொண்டிருக்கும் பறவைகள்; என்றாலும், மரங்கள் ஒன்றோடு ஒன்று உரசிக்கொள்வதினால் உண்டான சத்தம், அவைகள் எதையோ பேசிக்கொள்வதுபோலத் தென்பட்டது. மரணத்தைச் சந்திக்க தனது மனதை ஆயத்தமாக்கிக்கொண்டு, வாங்கியிருந்த விஷத்தைச் சுற்றியிருந்த காகிதத்தை மெல்ல பிரித்தான் ராகுல். ஏதா அதில் எழுதியிருக்கிறதே; என்று வாசிக்கத் தொடங்கினான், 'நீ பயப்படாதே, நான் உன்னுடனே இருக்கிறேன்; திகையாதே, நான் உன் தேவன்; நான் உன்னைப் பலப்படுத்தி உனக்குச் சகாயம்பண்ணுவேன்; என் நீதியின் வலதுகரத்தினால் உன்னைத் தாங்குவேன்' (ஏசா 41:10) என்ற வசனத்தை வாசித்ததும், யாரோ ஒருவர் தன்னோடு பேசுவதை உணர்ந்தவனாக, யார்? என்ற கேள்வியோடு மரணத்தை மறந்து காலை வரை காட்டிலேயே கண்விழித்திருந்தான்.  

மறுநாள் காலை, சூரியன் தன் கதிர்களை வீசி வானத்தில் ஏறிக்கெண்டிருந்தது. காட்டிலிருந்து கால்நடையாக வீட்டை நோக்கி நடந்தான் ராகுல். வீட்டின் உள்ளே சென்றதும்; அவன் வீசியெறிந்த காகிதம் கதவண்டையிலே காலடியில் கிடந்தது; குனிந்து அதனை கையிலெடுத்து வாசித்த ராகுலுக்கு மீண்டும் அதிர்ச்சி, அதிலும், 'நீ பயப்படாதே, நான் உன்னுடனே இருக்கிறேன்; திகையாதே, நான் உன் தேவன்; நான் உன்னைப் பலப்படுத்தி உனக்குச் சகாயம்பண்ணுவேன்; என் நீதியின் வலதுகரத்தினால் உன்னைத் தாங்குவேன்' (ஏசா 41:10) என்றே எழுதியிருந்தது. தன்னுடைய வீட்டிற்கு வந்து முதியவர் கொடுத்த காகிதத்தை தான் வீசியெறிந்ததுபோல, கடைக்காரருக்கும் அந்த முதியவரே கொடுத்திருக்கக்கூடும் என்பதை அறிந்துகொண்டான் ராகுல்.  மரணத்தை நோக்கி நடந்துகொண்டிருந்த மனிதனை, வீட்டிற்கு வந்து தடுத்ததுடன், விஷம் வாங்கிய இடத்திலும் விஷத்தை சுற்றி காகிதமாக வந்து கரத்தைப் பிடித்த ஆண்டவருக்கு தனது வாழ்க்கையை அர்ப்பணித்தான். வசனத்தை விதையுங்கள்; அவைகள் ஒருபோதும் வீணாவதில்லை. வாசித்தாலும், வீசினாலும் அவை வீணாவதில்ல.

Comments

Popular posts from this blog

விஷம்

 சிறுகதை www.sinegithan.in இரவு நேரம் குடத்தில இருந்த தண்ணிய கொஞ்சம் சின்ன பாத்திரத்தில சரிச்சி, அணைஞ்சிபோன அடுப்புக்கு மேலே இருந்த சோத்துப் பானையில எஞ்சியிருந்த சோத்துக்குள்ள கொஞ்சமா ஊத்தி, கையால சோத்த தண்ணியோடக் கரச்சி கஞ்சியாக்கிக் குடிச்சிப்புட்டு, ஒண்டிக்கட்டையா தான் வாழும் பனை ஓலை குடில் போன்ற மண்கட்டு வீட்டில, வலக்கையை மடக்கி முடக்கி தலையணையா வச்சிக்கிட்டு, வாழ்ந்த நாள் நினைவுகள் அவ்வப்போது வந்துபோக, முடிந்துபோன தாரத்தின் நாட்கள் முன்னுக்கு வந்து நிற்க, பெற்றெடுத்தப் பிள்ளைகள் தூரத்தில் வாழ்ந்திருக்க அத்தனையையும் நினைத்துக்கொண்டிருந்த முதியவரை தன் மடியில் அள்ளி அணைத்திருந்தது தூக்கம்.   இரவு தன்னை ஆழப்படுத்திக்கொண்டே செல்லச் செல்ல, நள்ளிரவின் உச்சத்தில், எள்ளளவும் தன்நினைவின்றி உலகத்திற்கும் உடலுக்கும் தொடர்பேதுமில்லாதவரைப்போலத் தூங்கிக்கொண்டிருந்தபோது, திடீரென செவிகளில் 'டொம் டொம் டொம்' என்று ஒன்றன் பின் ஒன்றாய்ப் பாத்திரங்கள் வரிசையாகச் சரிந்துவிழுந்துகொண்டேயிருக்கும் சத்தங்கள் கேட்க, சவம்போல் கிடந்த அவர் சட்டென எழுந்து, தன் வீட்டின் அடுப்பங்கறைக்குச் சென்று ...

தோற்றமும், மாற்றமும்

  தோற்றமும், மாற்றமும் குறிஞ்சிக் குளம், சின்னதோர் கிராமம், இருபுறமும் பக்கவாட்டில் வரிசையாக ஆறு தெருக்கள். இந்த சின்ன கிராமத்திலேதான் குடியிருந்தது செல்லமணியின் குடும்பம். 'ஏபுள்ள இன்னுமா எழும்பல நீ, எவ்வளவு நேரந்தான் படுத்து கிடப்ப, சீக்கிரத்தில எழும்பி வீட்டு வேலயைப் பாக்கப்புடாதா' என்று படுக்கையில் அயர்ந்து தூங்கிக்கொண்டிருந்த செல்லமணியை தாய் பூந்தெழிலம்மை கூப்பிட, 'பொறேன்மா, கொஞ்சம் தூங்கிட்டு வர்ரேன், ரொம்ப தூக்கமா வருது' என்று தாயின் காதில் விழும்படியாகப் புலம்பினாள் செல்லமணி. 'வயது இருபது ஆயிற்று, வளர்ந்து ஆளாயிட்ட, புகுந்த வீட்டில போயி உன் மாமியாருகிட்ட இப்படி புலம்ப முடியுமா?' என்று தனக்குள்ளோ சொல்லிக்கொண்டு, தன் வேலையைத் தொடர்ந்தாள் தாய் புந்தெழிலம்மை. 'நான் வடிச்சி கொட்டுற வீட்டுல நீ எப்படியிருந்தாலும் பரவாயில்ல, நீ வடிச்சிக் கொட்டப்போற வீட்டுல உனக்கு உருப்படியா வாழத்தெரிஞ்சா போதும்' என்று தனக்கான கடமை என காலை வேலையை வீட்டில் தொடர்ந்தாள் தாய் பூந்தெழிலம்மை.  நாட்கள் ஓட ஓட, சில வருடங்களும் கடந்தது, செல்லமணியின் தோற்றத்துடன் வயதும் 23 என வளர்ந...