Skip to main content

Posts

தோற்றமும், மாற்றமும்

  தோற்றமும், மாற்றமும் குறிஞ்சிக் குளம், சின்னதோர் கிராமம், இருபுறமும் பக்கவாட்டில் வரிசையாக ஆறு தெருக்கள். இந்த சின்ன கிராமத்திலேதான் குடியிருந்தது செல்லமணியின் குடும்பம். 'ஏபுள்ள இன்னுமா எழும்பல நீ, எவ்வளவு நேரந்தான் படுத்து கிடப்ப, சீக்கிரத்தில எழும்பி வீட்டு வேலயைப் பாக்கப்புடாதா' என்று படுக்கையில் அயர்ந்து தூங்கிக்கொண்டிருந்த செல்லமணியை தாய் பூந்தெழிலம்மை கூப்பிட, 'பொறேன்மா, கொஞ்சம் தூங்கிட்டு வர்ரேன், ரொம்ப தூக்கமா வருது' என்று தாயின் காதில் விழும்படியாகப் புலம்பினாள் செல்லமணி. 'வயது இருபது ஆயிற்று, வளர்ந்து ஆளாயிட்ட, புகுந்த வீட்டில போயி உன் மாமியாருகிட்ட இப்படி புலம்ப முடியுமா?' என்று தனக்குள்ளோ சொல்லிக்கொண்டு, தன் வேலையைத் தொடர்ந்தாள் தாய் புந்தெழிலம்மை. 'நான் வடிச்சி கொட்டுற வீட்டுல நீ எப்படியிருந்தாலும் பரவாயில்ல, நீ வடிச்சிக் கொட்டப்போற வீட்டுல உனக்கு உருப்படியா வாழத்தெரிஞ்சா போதும்' என்று தனக்கான கடமை என காலை வேலையை வீட்டில் தொடர்ந்தாள் தாய் பூந்தெழிலம்மை.  நாட்கள் ஓட ஓட, சில வருடங்களும் கடந்தது, செல்லமணியின் தோற்றத்துடன் வயதும் 23 என வளர்ந
Recent posts

விஷம்

 சிறுகதை www.sinegithan.in இரவு நேரம் குடத்தில இருந்த தண்ணிய கொஞ்சம் சின்ன பாத்திரத்தில சரிச்சி, அணைஞ்சிபோன அடுப்புக்கு மேலே இருந்த சோத்துப் பானையில எஞ்சியிருந்த சோத்துக்குள்ள கொஞ்சமா ஊத்தி, கையால சோத்த தண்ணியோடக் கரச்சி கஞ்சியாக்கிக் குடிச்சிப்புட்டு, ஒண்டிக்கட்டையா தான் வாழும் பனை ஓலை குடில் போன்ற மண்கட்டு வீட்டில, வலக்கையை மடக்கி முடக்கி தலையணையா வச்சிக்கிட்டு, வாழ்ந்த நாள் நினைவுகள் அவ்வப்போது வந்துபோக, முடிந்துபோன தாரத்தின் நாட்கள் முன்னுக்கு வந்து நிற்க, பெற்றெடுத்தப் பிள்ளைகள் தூரத்தில் வாழ்ந்திருக்க அத்தனையையும் நினைத்துக்கொண்டிருந்த முதியவரை தன் மடியில் அள்ளி அணைத்திருந்தது தூக்கம்.   இரவு தன்னை ஆழப்படுத்திக்கொண்டே செல்லச் செல்ல, நள்ளிரவின் உச்சத்தில், எள்ளளவும் தன்நினைவின்றி உலகத்திற்கும் உடலுக்கும் தொடர்பேதுமில்லாதவரைப்போலத் தூங்கிக்கொண்டிருந்தபோது, திடீரென செவிகளில் 'டொம் டொம் டொம்' என்று ஒன்றன் பின் ஒன்றாய்ப் பாத்திரங்கள் வரிசையாகச் சரிந்துவிழுந்துகொண்டேயிருக்கும் சத்தங்கள் கேட்க, சவம்போல் கிடந்த அவர் சட்டென எழுந்து, தன் வீட்டின் அடுப்பங்கறைக்குச் சென்று அங்கும

வசனம் வீணாவதில்லை

 வசனம் வீணாவதில்லை www.sinegithan.in கல்லூரி வகுப்புகள் முடிந்ததும், விடுதியை நோக்கி நடந்துகொண்டிருந்தான் ராகுல்; வீட்டை விட்டு தூரமாயிருந்ததால், வீட்டின் நினைவுகள் அவ்வப்போது அவனை வாட்டியெடுத்தன. ஒருபுறம் வீட்டில் வியாதிப்படுக்கையில் இருக்கும் தாய், மற்றொருபுறம் குடித்துவிட்டு குடும்பத்தினைக் குறித்து கவலையற்று வாழும் தந்தை. வறுமையின் நிமித்தம் உறவினர்களும் தனக்குத் தூரமாயிருக்கும் சூழ்நிலை. நண்பர்களது உதவியுடன் கல்லூரிப் படிப்பினை தொடர்ந்துகொண்டிருந்தான். எனினும், மற்ற மாணவர்களுக்குக் கிடைத்த வாழ்க்;கை, தனக்குக் கிடைக்கவில்லையே என்ற வருத்தம், அவ்வப்போது அவனை 'நீ ஏழை' என்பதை நிறுத்துச் சொல்லிக்கொண்டிந்ததால், 'வாழ்ந்தெதற்கு?' என்ற கேள்வியும் இடையிடையே இதயத்தில் வந்துபோனது. வருத்தங்களை நினைத்து, நினைத்து வீட்டிற்கு வந்துபோவதையும் தவிர்த்துவந்தான் ராகுல். கல்லூரியின் கடைசி ஆண்டு, வீட்டைக்கூட காணாதபடி கண்களை மூடிக்கொண்டு, படிப்பிலேயே மூழ்கியிருந்தான் ராகுல்.  மூன்று ஆண்டுகளுக்குப் பின், காலம் ஒருவழியாக கல்லூரி வளாகத்திலிருந்து தன்னை வெளியேற்ற, வீடு வந்து சேர்ந்தான் ராகுல

காலை இழந்த கால் பந்து

  www.sinegithan.in தந்தை கால்பந்தாடும் அந்தக் கண்கொள்ளாக் காட்சியைப் பார்த்து பார்த்து ரசித்து, தானும் அப்பாவைப் போல கால்பந்தாட்ட வீரனாகவேண்டும் வெறி இலட்சியம் அன்பரசனுக்குள் உருவானது. குழந்தையைப்போல பத்திரமாக தந்தை வீட்டில் வைத்திருக்கும் கால்பந்தை தொட்டுப் பார்ப்பதில்தான் அவனுக்கு எத்தனை அலாதிப் பிரியம். என்றாலும், தன் கால்களால் அதனை உதைத்து விளையாடுவதற்கு அப்பா விட்டுத்தர ஆயத்தமாயிராதது அவனுக்கோ அனுதின துக்கம். பயிற்சிக்காக அப்பா புறப்படும்போதெல்லாம், உடன் செல்லவேண்டும் என்பதில் உற்சாகமாக இருந்தான். பள்ளியிலிருந்து வந்ததும், வியர்வை நிற்பதற்கு முன் வீட்டுப் பாடங்களைப் படித்துக்கொண்டே, அப்பா புறப்படுவதைக் கவனிக்க ஓரக்கண்ணுக்கும் ஒருபுறம் வேலைகொடுத்துக்கொண்டிருந்தான். தந்தை புறப்பட்டதும், 'தாங்கப்பா, மைதானம் வரை பந்தை நான் கொண்டு வருகிறேன்' என்று பந்தை வலிய வாங்கிக்கொண்டு, வழியெல்லாம் புன்சிரிப்புடன் அவன் நடக்கும் நடையால், தந்தையை அல்ல, தன்னைத்தானே கால்பந்தாட்ட வீரன் என்று அழகுபார்த்துக்கொண்டவன் அவன். அது வெள்ளிக்கிழமை, அப்பா மைதானத்திற்குப் புறப்பட்டார், அன்பரசனும் பந்துடன்

தனவதி

  தனவதி   www.sinegithan.in                                                  அது ஒரு மாலை நேரம். காட்டுப் புறத்தில் தன்னைத் தானே காப்பாகக் கொண்டு அமைந்திருந்தது அந்தத் தனி வீடு. எட்டிக் கூப்பிடும் தூரத்திலும், எட்டிப் பார்க்கும் தொலைவிலும் வீடுகள் வேறேதும் இல்லாத நிலையில் அமைதியில் துயிலுறங்கிக்கொண்டிருந்தது. சாலைகளில் ஓடும் வண்டிகளின் சத்தம், பயணிகளின் அலசடி, கடைத்தெரு வீதிகளின் சலசலப்பு என அத்தனைக்கும் தன்னை விதிவிலக்காக்கிக் கட்டப்பட்டிருந்தது. அந்நிய நாட்டிற்கு அன்று அடிமைப்பட்டிருந்தாலும், அந்நியர் வியக்கும் வீட்டின் விதிகளைக் கொண்டது இந்தியா என்பதற்கு அடையாளமாக வாழ்ந்துகொண்டிருந்தாள் தனவதி. மெலிந்த உருவம், எண்பத்து ஒன்பது வயதினைத் தாண்டி தொண்ணுரைத் தொடும் நாள் அது. அன்று காலைப் பொழுதில், நான்கரை மணிக்கெல்லாம் விழிப்புத் தட்டியது. உறக்கத்தைக் களைந்து, வீட்டு வேலைகளைத் தொடங்க இன்னுஞ் கொஞ்சம் நேரமாகட்டுமே என கட்டிலில் படுத்தே கிடந்தாள். பொழுது விடியும் வரைப் பொறுமையாயிருக்க அவளது மனது பொறுத்துக்கொள்ளவில்லை. கிராமத்தில் பிறந்து வளர்ந்தவள், கருக்கலில் எழுந்து வீட்டு வேலைகளைச் செய்யத்

நிஜமாகாத நிழல்

  நிஜமாகாத நிழல்   www.sinegithan.in                                                                                 அப்பா அன்று திட்டிய வார்த்தையினை ரவியினால் பொறுத்துக்கொள்ளவே முடியவில்லை. அப்போது அவனுக்கு பதினேழு வயதுதான் என்றபோதிலும், தான் செய்த ஒரு சிறிய தவறுதலுக்காக இப்படி தன்னை தனது நண்பர்கள் அறிய அத்தனை உரத்தக் குரலில் ஊரறிய தந்தை உறுமிக்கொண்டிருக்கிறாரே என ரவி பொறுமிக்கொண்டிருந்தான். ஆற்றிற்குச் சென்று குளிக்கக்கூடாது என்ற அப்பாவின் கட்டளையினை மீறியதால் வந்த விளைவினை தண்டணையாக அனுபவித்துக்கொண்டிருந்தான் ரவி. ஒரு புறம் தந்தை அடிக்கும் அடிகளைச் சகித்துக்கொண்டிருக்க அவனுக்கு பெலனிருந்தபோதிலும், அதனை நண்பர்கள் பார்க்கின்றதை அவனால் சகிக்க முடியவில்லை. உடன் பிறந்த சகோதரர்களும் அப்பாவின் கைக்குத் தன்னைத் தப்புவிக்காமல், தன்னைப் பார்த்து ரசித்துக்கொண்டிருக்கின்றனரே என்ற வெறுப்பும் அவனுக்குள் நெருப்பாய் கிளம்பியது. அப்போது ஓடிவந்தாள் அவனது மூத்த தமக்கை, 'போதும் விடுங்க, ஏதோ ஒரு நாள் தெரியாம ஆத்துல குளிக்கப் போயிட்டான், இனிம போக மாட்டான்' என்று அப்பாவிடம் அவள் பேசியபோது சற்று அட

கடலில் கரைந்த கன்னி

கடலில் கரைந்த கன்னி  சூரியன் மெல்ல மெல்ல மேற்கில் தன் கதிர்களைக் சுருக்கிக்கொண்டு மறைந்துகொண்டிருந்தபோது, அதனைப் பார்க்க மனதில்லாதவன் போல கிழக்கு திசையில் உள்ள கடலையே வைத்த கண் எடுக்காமல் பார்த்துக்கொண்டிருந்தான் அந்த வாலிபன். ஏறக்குறைய இருபத்து மூன்று வயது இருக்கும். எடுப்பான தோற்றம், மாநிறம், நல்ல குடும்பத்தைச் சேர்ந்த படித்த வாலிபன். கடற்கரையில் காற்று வாங்கும்படி வந்த பலரது இரைச்சல்கள் அந்த வாலிபனின் சிந்தையை சிதறடிக்கவில்லை. எதையோ ஆழ்ந்து சித்தித்தவன் போல, எதையோ இழந்துவிட்டவன் போல, தனிமை தான் இனி கதி என்ற மனதுடன் மண் தரையில் அமர்ந்திருந்தான். கடற்கரை மணலில் அவனது விரல்கள் யாரும் புரியா புதிராக சில கோலங்களை வரைந்துகொண்டிருந்தன. தனக்கு மேலே எழுதப்பட்டபோதிலும் மண்ணினால் கூட விளங்க இயலாத வரிகள் அவை. கடலில் ஆடி ஆடி ஆரவாரிக்கும் அலைகளை அவனது விழிகள் விரித்துப் பார்த்துக்கொண்டிருந்தன. அப்படி என்ன தேடினால் கடலலையில்? என்ன நடந்தது அவனது வாழ்க்கையில்?  மூன்று ஆண்டுகளுக்கு முன்பு குடும்பத்தை விட்டு பிரிந்து முதன் முறையாக பட்டணத்தை நோக்கிப் பயணமானவன் அவன். பொறியியல் கல்லூரியில் முதலாமாண்டு சே