Skip to main content

விஷம்

 சிறுகதை

www.sinegithan.in


இரவு நேரம் குடத்தில இருந்த தண்ணிய கொஞ்சம் சின்ன பாத்திரத்தில சரிச்சி, அணைஞ்சிபோன அடுப்புக்கு மேலே இருந்த சோத்துப் பானையில எஞ்சியிருந்த சோத்துக்குள்ள கொஞ்சமா ஊத்தி, கையால சோத்த தண்ணியோடக் கரச்சி கஞ்சியாக்கிக் குடிச்சிப்புட்டு, ஒண்டிக்கட்டையா தான் வாழும் பனை ஓலை குடில் போன்ற மண்கட்டு வீட்டில, வலக்கையை மடக்கி முடக்கி தலையணையா வச்சிக்கிட்டு, வாழ்ந்த நாள் நினைவுகள் அவ்வப்போது வந்துபோக, முடிந்துபோன தாரத்தின் நாட்கள் முன்னுக்கு வந்து நிற்க, பெற்றெடுத்தப் பிள்ளைகள் தூரத்தில் வாழ்ந்திருக்க அத்தனையையும் நினைத்துக்கொண்டிருந்த முதியவரை தன் மடியில் அள்ளி அணைத்திருந்தது தூக்கம்.  

இரவு தன்னை ஆழப்படுத்திக்கொண்டே செல்லச் செல்ல, நள்ளிரவின் உச்சத்தில், எள்ளளவும் தன்நினைவின்றி உலகத்திற்கும் உடலுக்கும் தொடர்பேதுமில்லாதவரைப்போலத் தூங்கிக்கொண்டிருந்தபோது, திடீரென செவிகளில் 'டொம் டொம் டொம்' என்று ஒன்றன் பின் ஒன்றாய்ப் பாத்திரங்கள் வரிசையாகச் சரிந்துவிழுந்துகொண்டேயிருக்கும் சத்தங்கள் கேட்க, சவம்போல் கிடந்த அவர் சட்டென எழுந்து, தன் வீட்டின் அடுப்பங்கறைக்குச் சென்று அங்கும் இங்கும் அலசிப் பார்த்தார். கண்களில் ஏதும் தென்படாதிருக்க, ஒன்றும் புரியாதவராக, எங்கிருந்து வந்தது சத்தம் என்று சற்று யோசிப்பதற்குள், செவிகளில் வந்து விழுந்தது மீண்டும் பாத்திரங்கள் சரிந்துவிழும் தொடரொலி. தூக்கத்திலிருந்து எழுந்திருந்தபோதிலும், சுதாரித்துக்கொண்ட முதியவர், மெல்ல மெல்ல சத்தம் வந்த திசையை நோக்கி தனது பாதங்களை எடுத்துவைத்து நகர்ந்து செல்ல, 'சில்' என்ற ஒலியுடன் நிலவியது அமைதி; அது அண்டை வீட்டின் முகம் பார்க்கும் கண்ணாடி உடைந்த சத்தம். இனி தன் முகத்தைத் தானே பார்த்துக்கொள்ள முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டனர் இருவரும். 

அண்டை வீட்டிலிருந்துதான் இத்தனை சத்தங்களும், சந்திக்கு வருகின்றன என்பதை அறிந்துகொண்ட முதியவர், அந்த வீட்டின் பின்முனையில் திறந்து கிடந்த ஒருபுறக்கதவு இல்லாத ஜன்னல் வழியாக எட்டிப் பார்த்தபோது, புதிதாக குடிபுகுந்திருந்த கணவனும் மனைவியும் கையில் கிடைத்தவைகளைக் கொண்டு ஒருவரை ஒருவர் தாக்கிக்கொண்டிருந்தனர். 'போதும்பா, நிறுத்துங்க, நாலு குடும்பங்க வாழுற தெரு இது' என்ற சத்தம் தொண்டை வரை வந்து நின்றபோதிலும், முதியவரின் வாயிலிருந்து அவை வெளியேற மறுத்தன. ஒத்தக்கட்ட நம்மால இவங்கள என்னத்த செய்ய முடியும்? என்று தனக்குள்ளேயே பொருமிக்கொண்டவராக, கையிலிருந்த ஊன்றுதடியைப் பிடித்துக்கொண்டு, மெல்ல மெல்ல நடந்து, தான் வசிக்கும் வீட்டறைக்குள்ளேயே மீண்டும் வந்து படுத்தார் முதியவர். 

மாதங்களாகவும், வருடங்களாகவும் நாட்கள் கடந்தோடின, நித்தம் நித்தம் இத்தனை சண்டைகளுடனான குடும்ப வாழ்க்கையின் மத்தியிலும் 'குவா குவா' என்ற குழந்தை ஒன்றையும் அத்தம்பதியினர் பெற்றெடுத்தபோது, அதிர்ச்சியில் உறைந்துபோனார் முதியவர். எப்படி சாத்தியம் இது? என ஏழெட்டு கேள்விகள் அவருக்குள்ளே வந்துபோனாலும், தனிக்கட்டையாய்க் கிடக்கும் அவரால் அதற்குத் தீர்ப்பெழுதத் தெரியவில்லை. பால்குடி மறந்து, வளர்ந்து குழந்தை அடியெடுத்து நடக்கப்பழகிய போதிலும், பெற்றெடுத்த அவர்களுக்குள் வாய்ச்சண்டையோ வளர்ந்துகொண்டேதானிருந்தது. ஒவ்வொரு முறை சண்டை வரும்போதெல்லாம், புருஷன் திட்டுவதும், மனைவி உடனே ஓடிச் சென்று தான் மறைவாக வைத்திருக்கும் விஷமருந்துப் பாட்டிலை கையில் எடுத்து குடித்துவிடுவேன் என மிரட்டுவதும் வழக்கமாயிருக்க. குழந்தையும் சிறுவன் என்ற பருவத்தைத் தொட்டது. 

அம்மாவுக்கும் அப்பாவுக்கும் சண்டை வரும்போதெல்லாம், அம்மா செய்வதை அடிக்கடிப் பார்த்துப் பார்த்து தனது நினைவிலே பதித்திருந்த சிறுவன், பெற்றோர் தனியே தன்னை விட்டுவிட்டு வெளியே சென்றிருந்த நாளொன்றிலே, சண்டையின் நேரத்தில் தாய் எடுக்கும் அந்த பாட்டலில்  இருப்பது என்ன எனக் காண ஆவல்கொண்டு, சற்று எட்டாத உயரத்திலிருக்கும் அந்தப் பாட்டிலை, கட்டைகளை அடுக்கி ஏறி, கைகளால் எடுத்து திறந்து, விபரம் அறியாது வாயில் ஊற்றிவிட, வாந்தியும் மயக்கமும் வந்து வாசலண்டையிலே விழுந்துகிடந்தான். எல்லாம் முடித்துவிட்டு, வாங்கியதெல்லாவற்றையும் சுமந்துகொண்டு, சற்று நேரத்தில் வீடடைந்த பெற்றோர், வாசலிலே விழுந்துகிடந்த பிள்ளைக்கு அருகில் திறந்துகிடந்த விஷமருந்து பாட்டிலைக் கண்டதும், தூக்கிக்கொண்டு மருத்துவமனைக்கு ஓடினபோதிலும், குழந்தை பிழைப்பதற்குக் காலம் கடந்திருந்தது.  பெற்றோர்களின் சண்டை தீர்வதற்கு முன், பிள்ளை தனக்குத் தீர்ப்பெழுதிக்கொண்டது. குழந்தைக்கு விஷமானது பாட்டலிலிருந்ததல்ல, வீட்டிலிருந்ததே. வாழ்க்கையைப் பிணக்காக்கினப் பெற்றோரால், வாழ்வையே பாராத ஓர் பிஞ்சு வீழ்ந்துபோனது.

Comments

Popular posts from this blog

தோற்றமும், மாற்றமும்

  தோற்றமும், மாற்றமும் குறிஞ்சிக் குளம், சின்னதோர் கிராமம், இருபுறமும் பக்கவாட்டில் வரிசையாக ஆறு தெருக்கள். இந்த சின்ன கிராமத்திலேதான் குடியிருந்தது செல்லமணியின் குடும்பம். 'ஏபுள்ள இன்னுமா எழும்பல நீ, எவ்வளவு நேரந்தான் படுத்து கிடப்ப, சீக்கிரத்தில எழும்பி வீட்டு வேலயைப் பாக்கப்புடாதா' என்று படுக்கையில் அயர்ந்து தூங்கிக்கொண்டிருந்த செல்லமணியை தாய் பூந்தெழிலம்மை கூப்பிட, 'பொறேன்மா, கொஞ்சம் தூங்கிட்டு வர்ரேன், ரொம்ப தூக்கமா வருது' என்று தாயின் காதில் விழும்படியாகப் புலம்பினாள் செல்லமணி. 'வயது இருபது ஆயிற்று, வளர்ந்து ஆளாயிட்ட, புகுந்த வீட்டில போயி உன் மாமியாருகிட்ட இப்படி புலம்ப முடியுமா?' என்று தனக்குள்ளோ சொல்லிக்கொண்டு, தன் வேலையைத் தொடர்ந்தாள் தாய் புந்தெழிலம்மை. 'நான் வடிச்சி கொட்டுற வீட்டுல நீ எப்படியிருந்தாலும் பரவாயில்ல, நீ வடிச்சிக் கொட்டப்போற வீட்டுல உனக்கு உருப்படியா வாழத்தெரிஞ்சா போதும்' என்று தனக்கான கடமை என காலை வேலையை வீட்டில் தொடர்ந்தாள் தாய் பூந்தெழிலம்மை.  நாட்கள் ஓட ஓட, சில வருடங்களும் கடந்தது, செல்லமணியின் தோற்றத்துடன் வயதும் 23 என வளர்ந

வசனம் வீணாவதில்லை

 வசனம் வீணாவதில்லை www.sinegithan.in கல்லூரி வகுப்புகள் முடிந்ததும், விடுதியை நோக்கி நடந்துகொண்டிருந்தான் ராகுல்; வீட்டை விட்டு தூரமாயிருந்ததால், வீட்டின் நினைவுகள் அவ்வப்போது அவனை வாட்டியெடுத்தன. ஒருபுறம் வீட்டில் வியாதிப்படுக்கையில் இருக்கும் தாய், மற்றொருபுறம் குடித்துவிட்டு குடும்பத்தினைக் குறித்து கவலையற்று வாழும் தந்தை. வறுமையின் நிமித்தம் உறவினர்களும் தனக்குத் தூரமாயிருக்கும் சூழ்நிலை. நண்பர்களது உதவியுடன் கல்லூரிப் படிப்பினை தொடர்ந்துகொண்டிருந்தான். எனினும், மற்ற மாணவர்களுக்குக் கிடைத்த வாழ்க்;கை, தனக்குக் கிடைக்கவில்லையே என்ற வருத்தம், அவ்வப்போது அவனை 'நீ ஏழை' என்பதை நிறுத்துச் சொல்லிக்கொண்டிந்ததால், 'வாழ்ந்தெதற்கு?' என்ற கேள்வியும் இடையிடையே இதயத்தில் வந்துபோனது. வருத்தங்களை நினைத்து, நினைத்து வீட்டிற்கு வந்துபோவதையும் தவிர்த்துவந்தான் ராகுல். கல்லூரியின் கடைசி ஆண்டு, வீட்டைக்கூட காணாதபடி கண்களை மூடிக்கொண்டு, படிப்பிலேயே மூழ்கியிருந்தான் ராகுல்.  மூன்று ஆண்டுகளுக்குப் பின், காலம் ஒருவழியாக கல்லூரி வளாகத்திலிருந்து தன்னை வெளியேற்ற, வீடு வந்து சேர்ந்தான் ராகுல