'வேண்டாம் மா வேண்டாம்' என்று திரும்பத் திரும்பச் சொல்லி அழுதுகொண்டிருந்த ஒரு இளைஞியின் குரல், தெருவழியே நடந்துபோய்க்கொண்டிருந்த முதியவரை நிறுத்தியது. என்ன நடக்கிறது இந்த வீட்டில், எட்டிப் பார்க்கலாமா? என்று முதியவரின் மனம் திசை மாற, வாசற் கதவைச் சென்று தட்டினார். கதறி அழுதுகொண்டிருந்த சத்தத்திற்கு இடையே கதவைத் திறப்பதற்கோ தாமதமானது; மகளை அடித்த கோபத்துடன் வியர்க்க விறுவிறுக்க முதியவரின் முன்னே வந்து நின்றாள் தாய். என்னம்மா நடக்குது? குழந்தைய யாம்மா இப்படி அடிக்கிற? என்று முதியவர் கேட்க, 'என்ன செய்துட்டு வந்து நிக்குறானு பாருங்கய்யா? இவள எல்லாம் ஸ்கூலுக்கு, காலேஜிக்கு அனுப்பினதுக்கு யாந்தலய செருப்பால அடிச்சிக்கணும்; சொந்த பந்தத்துல, தெரிந்த ஜனத்துக்குள்ள மாப்பிள்ள பாத்து காலா காலத்தில தாலிய கட்டி வச்சி கர சேத்துப்புடனும்ணு நாங்க கஷ்டப்படறோம். ஒத்தைக்கு ஒரு பொண்ணு இவளைக் கட்டிக்கொடுத்தப்புறம் ஒதுங்கக்குக் கூட எங்களுக்கு எங்க இடமுன்னு நாங்க கவலப்படுறோம். சொந்த மாமன் வீட்ல நாளைக்கு பொண்ணு பார்க்க வர்ற சமயத்துல, காலேஜ்ல எவனையோ லவ் பண்ணுறாளாம், கட்டிக்கிட்டா அவனத்தான் கட்டிப்பேன்னு சபதம் போடுறா. இவள இளக்காரமா வளத்தது யாந்தப்பு' என்று பேசித்தீர்த்தாள் தாய். தந்தையோ மறுநாள் விருந்துக்கான கொள்முதலுக்காகக் கடைவீதிக்குப் போயிருந்தார். தந்தை கடைவீதியிலிருந்து திரும்பிவருவதற்கு முன், இடைப்பட்ட நேரத்தில் தாயின் வழியாக தந்தைக்குத் சேதியைக் கொண்டு செல்ல தான் எடுத்த முயற்சியில் உண்டான தோல்வியால் பயந்து, நாணி, தலை குணிந்தவாறு வீட்டினுள் ஒரு மூலையில் சுவர்ப்புறமாய் திரும்பியவாறு உட்கார்ந்திருந்தாள் இளைஞி ரஞ்சினி.
தந்தை வந்தால் என்ன நடக்குமோ? என்ற அடுத்த கேள்வியை மனதில் அவள் கேட்டு முடிப்பதற்குள், 'கலைவாணி, கலைவாணி' என்று வாசலில் நுழைவதற்கு முன் வழக்கமாக அம்மாவையே செல்லமாகக் கூப்பிடும் அப்பாவின் குரல் கேட்டது; காய்கறிகள், இனிப்பு, வாழை இலை என பையுங் கையுமாய் கணவன் நின்றுகொண்டிருக்க, 'உங்க மகள் என்ன செய்துட்டு வந்துருக்கான்னு அவகிட்ட கேளுங்க' நாளைக்கு விருந்து வைக்கணுமா? அல்லது வர்ரவங்கள விரட்டியடிக்கணுமா? முடிவுசெய்யுங்க என்று போரைத் தொடங்கினாள் தாய். தணியாத தாயின் கோபத்தைத் தாங்கினவராக, மூலையில் இருந்த மகளை நோக்கி முன்னேறினார் தந்தை. தந்தையின் வருகையிலேயே அலறிக்கொண்டிருந்த அவள் மனம், அவர் நெருங்கியபோதோ நொறுங்கிப்போனது. தன்னை ஏறிட்டுப் பார்க்கவும் தயங்கியிருந்த மகளிடம், 'என்னம்மா நடந்துது கண்ணு' என்று அமர்ந்த தொனியில் கேட்க, அழுகையை நிறுத்தியவாறு ஆரம்பித்தாள் மகள். ஏம்மா கலைவாணி, நானும் ரஞ்சினியும் கொஞ்சம் கடற்கரைக்குப் போயிட்டு வர்றோம், ஒரு டம்ளர் காபி மட்டும் இரண்டுபேருக்கும் கொடு என்றார் தந்தை. மகளை பைக்கில்; ஏற்றிக்கொண்டு, கடற்கரைக்குச் சென்றார். பொது இடம், தந்தை அடிக்கவோ அராஜகமாகவோ நடந்துகொள்ளமாட்டார் என்று அவள் நினைத்துக்கொண்டிருந்தபோது, வாலிபத்தின் ஈர்ப்புகளையும், தீர்மானம் எடுக்கும் விதங்களையும், தவறிவிழும் பாதைகளையும், குடும்ப வாழ்வின் மாண்பினையும், எதிர்காலத்தைப் பற்றிய திட்டங்களையும், அவள்பால் தனக்கு இருக்கும் பாசத்தையும் எடுத்துச் சொன்னதுடன், காதலையும், காமத்தையும், கலியாணத்தையும் வேறுபிரித்துக்காட்டினார் தந்தை. அமைதியாய் கேட்டுக்கொண்டிருக்கும் மகளின் முடிவு என்னவாயிருக்குமோ? என்ற கேள்வி அவரது மூiளையை முட்டிக்கொண்டிருந்தது. மெல்ல வாய் திறந்த ரஞ்சினி, தந்தையிடம் தனது வாலிபத்தின் காரியங்களைக் கொட்டித்தீர்த்தாள். வீட்டிற்குத் திரும்பும் வேளை நெருங்கியதும், மகளின் தீர்மானம் என்னவாயிருக்கும் என்பதை அறிந்துகொள்ளும் ஆசை அவருக்குள் எழுந்து நின்றபோது, 'அப்பா, என்ன மன்னிச்சிடுங்க, இத்தனை ஆலோசனையை நீங்கள் முதலிலேயே கொடுத்திருந்தால் அம்மாவிடமிருந்து இத்தனை அடிகளுக்குத் தப்பியிருப்பேன் என்ற மகளது வாயின் வரிகள், தனக்குச் சாதகமான தீர்ப்பைச் சொல்லியதை உணர்ந்துகொண்டார்; இருவரின் கண்களும் கடலுக்கு முன் கலங்கின, மகளை அணைத்துக்கொண்டார் தந்தை. தான் இத்தனை பக்கத்தில் இல்லாததே அவள் துக்கத்துக்குக் காரணம் என்ற அறிவுடன் மகளை வீட்டிற்கு அழைத்துவந்தார். வாசலில் நுழையும்போது, 'கலைவாணி, கலைவாணி' விருந்த பிரமாதமாச் செய்யணும், என்று கணவன் சொன்ன வார்த்தையைக் கேட்டு கண்கலங்கிப்போனாள் தாய். கணவனுக்குப் பின்னே, மறைந்துவந்த மகளை ஆரத்தழுவி முத்தமிட்டாள். தன் மகளைப் பெற்ற மகப்பேறுவின் நினைவு அப்போது அவள் நெஞ்சை மூடியது.
கருத்துகள்
கருத்துரையிடுக