அம்மா, ஐயா பிச்சை போடுங்கம்மா, பசிக்குதும்மா' என்ற குரல் அந்தச் சிறுவனின் காதைத் தொடர்ந்து துளைத்துக்கொண்டிருந்தது. காலையில் சாலையில் தந்தை நடைப் பயிற்சி செய்யும்போது, உடன் சென்றிருந்த அவனின் உணர்வுகள் அனைத்தையும் அந்தக் குரல்கள் வருடிக்கொண்டிருந்தன. குதிரைக்கு லாடம் கட்டப்பட்டதுபோல, தந்தை சீராக நேராக மருத்துவர் தந்த விதிமுறைப்படி வீதியில் சுறு சுறுப்பாக தனது பயிற்சியினைச் செய்துகொண்டிருக்க, மகனின் விழிகளோ வீதியில் இடப்புறமும் வலப்புறமும் இருந்த பிச்சைக்காரர்களைப் பார்த்துப் பார்த்து தந்தையோடு சேர்ந்து நடப்பதையும், தந்தையின் வழியினையும் பலமுறை தவறவிட்டுக்கொண்டிருந்தன. ஓரமாய் இருந்த பிச்சைக்காரர்களைப் பார்த்துக்கொண்டே நடந்துகொண்டிருந்ததினால், பலமுறை மகனை உடன் நடந்துவருமாறு ஒழுங்குபடுத்திக்கொண்டிருந்தார் தந்தை. மகனை உடன் கூட்டிவந்தது பயிற்சிக்குத் தொந்தரவாயிருப்பதாக உணர்ந்து, கோபமடைந்தாலும், செல்லமகனை பாசமாக, 'இந்தா பாரு, அப்பாகூட நீ சரியா நடந்து வரலன்னா, நாளைக்கு உன்ன நான் கூட்டிக்கிட்டு வரமாட்டேன்' என்று எச்சரிப்பு மணி அடித்தார். இந்த மணி ஓசை மகனின் காதை அடைந்தாலும், 'அம்மா, ஐயா, பிச்சை போடுங்கம்மா, பசிக்குதும்மா' என்ற குரல்கள் மீண்டும் அவன் செவிகளை உடைத்துப்போட்டுவிட்டன.
வீட்டிற்கு வந்து இருக்கையில் அமர்ந்திருந்த தந்தையைப் பார்த்து, 'அப்பா, அவங்க ஏன் எல்லார்கிட்டயும் காசு கேக்குறாங்க?' என்று கேட்டபோது, 'அவங்க பிச்சைக்காரங்க' என்று மாத்திரம் தந்தை கொடுத்த பதில் மகனுக்குப் போதுமானதாக இல்லை. தந்தைக்கு உயர்ந்த பதவி, விலையுயர்ந்த கார், மாளிகை போன்ற வீடு என எதற்கும் குறைவற்ற அச்சிறுவனின் மனதில் குறையாய் உறைந்தது இக்கேள்வி. திடீரென நாட்டில் உள்நாட்டுக் கலவரம் வெடித்தது, தீவிரவாதிகள் நாட்டை தாங்கள் ஆளவேண்டும் என்று தீவிரம் காட்டிக்கொண்டிருந்தனர். நாட்டின் பொருளாதாரம் தாறுமாறாகச் சரியச் சரிய, வீட்டின் பொருளாதாரமும் தப்பிப் பிழக்கவில்லை. வீட்டில் சுகமாயிருந்த பலரை இந்நிலை வீதிக்கு இழுத்துவந்தது. செல்வந்தர்களாக வாழ்ந்த பலர் செல்வங்களை இழந்து நின்றனர். உணவுக்கே போராடும் நிலைக்கு உயர்ந்தவர்களும் கூட தள்ளப்பட்டனர். பிழைப்பு தேடி பிற நாடுகளுக்குப் பயணத்தைத் தொடர்ந்தன பல குடும்பங்கள். விற்றுவிடக் கூட வழியின்றி, இருந்த எல்லாவற்றையும் விட்டு விட்டு இச்சிறுவனின் குடும்பமும் தப்பியோட கப்பல் ஏறி வேற்று நாட்டுக்குள் புகுந்தது. புதிய நாடு, கையளவு கூட சொந்தம் என்று சொல்லிக்கொள்ள பூமி இல்லை, வாழ்க்கைக்கும், உணவுக்கும் வருமானம் எங்கிருந்து என்ற கேள்வி அச்சிறுவனின் தந்தையின் நெஞ்சை நிறைத்திருந்தது. சந்திக்கும் நபர்களிடத்திலெல்லாம் உதவி கேட்டு அலைந்துகொண்டிருந்தார் தந்தை. மனதிரங்கிய சிலரிடமிருந்து கிடைத்த பணம், பரந்த மனதுள்ளோரிடத்திலிருந்து வெளிப்பட்ட தயாள குணம், தாகமிஞ்சி நாவரண்டு நிற்கும் மனிதன் வாயில் நீர்ச் சொட்டுக்கள் விழுவதைப் போல அவ்வப்போது தந்தைக்குக் கிடைத்தன.
அப்பாவுக்கு இத்தகைய மாறுவேடம் வந்தபோது, நடைப்பயிற்சியின்போது தந்தையிடம் கேட்ட கேள்விக்கான விடை அச்சிறுவனுக்குக் கிடைத்தது. பிறர் வீதியில் இருப்பது அவர்கள் விதியல்ல, அது உன் மதியைச் சோதிக்கும் சதி. பரீட்சையில் தேர்ச்சிபெற உன்னுடையதை பங்கிட்டுத்தான் ஆகவேண்டும். பிறருக்குக் கொடுத்துவிட்டுப் போகவேண்டியதை, பையிலே எடுத்துக்கொண்டு போவது நியாயமோ? 'நாய்க்குட்டிகள் தங்கள் எஜமான்களின் மேஜையிலிருந்து விழும் துணிக்கைகளைத் தின்னுமே' என்று கானானிய ஸ்திரீ சொன்னபோது, எஜமானாகிய இயேசுவினிடமிருந்து துணிக்கைகள் விழுந்து அவள் மகளை குணமாக்கியதே (மத் 15:27,28). மேஜையிலிருந்து விழுந் துணிக்கைகளாலே தன் பசியை ஆற்ற ஆசையாயிருக்கும் லாசருக்களை (லூக். 16:21) மறந்துவிடவேண்டாம். நாம் அப்படிச் செய்தால், பசியாயிருந்தேன், எனக்குப் போஜனங்கொடுத்தீர்கள்; தாகமாயிருந்தேன், என் தாகத்தைத் தீர்த்தீர்கள்; அந்நியனாயிருந்தேன், என்னைச் சேர்த்துக்கொண்டீர்கள்; வஸ்திரமில்லாதிருந்தேன், எனக்கு வஸ்திரங்கொடுத்தீர்கள்; வியாதியாயிருந்தேன், என்னை விசாரிக்க வந்தீர்கள்; காவலிலிருந்தேன், என்னைப் பார்க்கவந்தீர்கள் என்பார் இயேசு. (மத் 25:36)
கருத்துகள்
கருத்துரையிடுக