Skip to main content

இரண்டும் வேண்டும்

 

(சிறுகதை)


 இரண்டும் வேண்டும்


ஆளரவாட்டம் இல்லாத அடர்ந்த காடு, நின்றுகொண்டிருந்த மரங்களின் இலைகள் வீசிய தென்றலினால் அசைந்துகொண்டிருந்தன. ஒருமிக்க அசையும் இசைகளால் பெலமுள்ள கிளைகளும் ஒன்றோடொன்று உரசிக்கொண்டிருந்தன. கொடி முதல் கொம்பென வளர்ந்து நின்ற அத்தனை மரங்களையும் ஒன்றுபோல நடமாடச் செய்துகொண்டிருந்த அந்தத் தென்றல் அந்த முழுக்காட்டையும் முக்காடாக மூடியிருந்தது. அக்காட்டை உறைவிடமாக்கிய உயிர்களான பறவைகளும், மிருகங்களும் மற்றும் பிற ஜந்துக்களும் தத்தம் இடங்களில் பதுங்கி வாழ்ந்துகொண்டிருந்தன, இது சுழற்சியான இக்காட்டின் நிகழ்ச்சி. இன்ன இடத்தில் இன்ன மரம் வளரவேண்டும் என்ற மனிதனின் வரையரைக்கு அப்பாற்பட்டு, சகலமும் சமம்  என்ற இறைவனது விருப்பப்படி அனைத்து விருட்சங்களும் பாகுபாடின்றி பரந்து கிடந்தன, ஒன்றோடு ஒன்று கலந்து கிடந்தன. உயர வளர விரும்பியும் பெலனில்லாத கொடிகளுக்கு, பெலமுள்ள தங்கள் கிளைகளை விரித்துக்கொடுத்திருந்தன மரங்கள். இத்தனையாய் எழில் கொஞ்சும் இடத்திலே, அருகருகே நின்றுகொண்டிருந்த சந்தனமரமும் மாமரமுமோ ஒன்றோடொன்று சண்டையிட்டுக்கொண்டிருந்தன. கம்மல்களைப் போல மாமரத்தில் ஆங்காங்கே கனிகள் தொங்கிக்கொண்டிருந்தன. இந்த மரத்தில் இத்தனை கனிகள் இருக்கையில், காடு முழுவதும் ஏன் பறந்து அலையவேண்டும் என்று எண்ணியதுபோல, பல பறவைகள் கூடுகளையும் மாமரத்தில் வேய்ந்து வைத்திருந்தன. மாமரத்தின் கிளைகளில் பல கனிகள் பறவைகளால் பாதி தின்று விடப்பட்ட நிலையில், விதைகளே விழவேண்டியது மீதியென தொங்கிக்கொண்டிருந்தன. குருவிகளின் கூடுகள், குஞ்சுகளின் கூச்சல்களோடு பறவைகளின் எச்சங்களாலும் மாமரத்தின் கிளைகளும் இலைகளும் அழுக்கடைந்திருந்த மாமரத்தைப் பார்க்கச் சகிக்காத சந்தன மரம் அதன் அருகில் இருப்பதை நினைத்து நினைத்து ஒவ்வொருநாளும் வெறுத்துக்கொட்டிக்கொண்டிருந்தது. பார், என்னிலிருந்து வரும் வாசனையால் இந்தக் காட்டை நான் எத்தனையாய் மணம் கமழப்பண்ணிக்கொண்டிருக்கின்றேன் என்று பெருமைப்பட்டுக்கொண்டது சந்தன மரம். நான் மனிதனின் உடல்களுக்குத் தேவையானவன் என்றது சந்தனமரம், நான் மனிதனின் உயிருக்குத் தேவையானவன் என்றது மாமரம். மணமேடை முதல் மயானம் வரை நானில்லாமல் ஒன்றும் நடக்காது என்றது சந்தனமரம், பசியினால் மயானத்திற்கு போகவிருப்போரையும் என் ருசியினால் காத்துக்கொள்ளுவேன் என்றது மாமரம். குளியலரையிலும் என்னை வைத்திருப்பார்கள் என்றது சந்தனமரம், எனக்குச் சமையலறையில் இடம் இருக்கிறது என்றது மாமரம். என்னை உரசினாலே வாசம் வரும் என்றது சந்தனமரம், என்னை உண்பதிலே வாசம் வரும் என்றது மாமரம். நான் அரசாங்கத்தினால் பாதுகாக்கப்படுகிறேன் என்றது சந்தனமரம், நான் ஒவ்வொரு குடும்பத்தினராலும் வீட்டிலேயும் பராமரிக்கப்படுகிறேன் என்றது மாமரம். சந்தையில் என் விலை உயர்வு என்றது சந்தனமரம், மக்கள் சந்தையில் வாங்குவதிலோ என் அளவு உயர்ந்தது என்றது மாமரம். ஒன்றுக்கொன்று விட்டுக்கொடுக்காமல் தொடர்ந்து வாதமிட்டுக்கொண்டிருந்தன. 

இம்மரங்களின் வாதங்களுக்கும் தீர்ப்புச் சொல்ல காட்டிற்குள் நுழைந்தான் ஒரு ஏழை மனிதன். கோடாரியுடனும், சாக்குப்பையுடனும் வந்தவன் காட்டில் உயர்ந்து நின்ற சந்தன மரத்தைக் கண்டு வியந்து நின்றான். அதன் வாசனையினை நுகர்ந்து உள்மூச்சு வாங்கினான். இந்த மரத்தின் கிளை ஒன்று என் வீட்டிலே இருந்தால் வீடே வாசனையினால் நிரம்பிவிடும் என்று நினைத்தவன், உடனே கோடரியை எடுத்து சந்தன மரத்தில் ஒரு கிளையினை ஓங்கி வெட்டினான், சண்டையிடும்போதோ கண்ணீர்விடாமல் பெருமையோடு பேசிக்கொண்டிருந்த சந்தன மரம், கிளை ஒன்றை இழக்கும்போதோ கண்ணீர்விட்டது. சந்தன மரத்தைப் பரிதாபமாகப் பார்த்துக்கொண்டிருந்த மாமரத்திலும் ஏறி பை நிறைய கனிகளையும் பறித்துக்கொண்டு வீடு திரும்பினான். அடர்ந்த காட்டிலிருந்து அறை வீட்டிற்குள் வந்த இரண்டும் ஒன்றையொன்று பார்த்துக்கொண்டிருந்தன. வீட்டிற்குள் ஓரிடத்தில் வாசனைக்கென சந்தன மரக்கிளையினை வைத்திருந்தான் அந்த மனிதன், மாங்கனிகளையோ சுவைத்த பின் மீண்டும் வேண்டும் என்ற மனதுடன் வீட்டுத் தோட்டத்தில் புதைத்துவைத்திருந்தான். மாமரம் அடக்கம் செய்யப்பட்டுவிட்டது, இனி என் ராஜ்யம்தான் என்று நினைத்தது சந்தன மரம். வெட்டிய அளவாகவே வீட்டிற்குள் வைக்கப்பட்டிரந்த சந்தனக் கட்டையோ உரச உரச வாசம் வீசி வீசி ஒருநாள் ஒன்றுமில்லாமற்போனது. மாவிதையோ மீண்டும் மரமாகி வீட்டுத் தோட்டத்தில் வளர்ந்தது, மறுபடியும் மறுபடியும் கனிகளைக் கொடுத்துக் கொடுத்துப் பசியாற்றிக்கொண்டிருந்தது. வாசனை விரும்பி மீண்டும் காட்டுக்குச் சென்ற அம்மனிதன், மாங்கனிகள் பறிக்கும் சாக்குப்பையினையோ வீட்டிலேயே வைத்துவிட்டுப் போயிருந்தான்.   

ஒவ்வொருவரையும் கர்த்தர் என்ன நோக்கத்துடன் படைத்தார்? என்பதை அறியாதவர்கள், தங்களையே உயர்த்தியும் மற்றவர்களைத் தாழ்த்தியுமே பேசிக்கொண்டிருப்பார்கள். வாசனையும் வேண்டும், பசியும் தீரவேண்டும் என்ற தீர்ப்பை சம்மதியாமல், வாசனை மட்டுமே வேண்டும் என்றோ அல்லது பசி மட்டுமே தீரவேண்டும் என்று ஒருதலைப் பட்சமாகப் பேசிக்கொண்டிருப்பார்கள். உன் வாழ்வையே மணம் வீசச் செய்துவிடு, உன் வாழ்வை விதையாகவும் மாற்றிவிடு. மற்றவர்களால் மணக்கவேண்டுமென்றால் அந்த ஏழை மனிதனைப் போல மறுபடியும் மறுபடியும் போகவேண்டியதிருக்கும். விதையாகவும் மாறிவிட்டால்,   வீடே தோட்டமாகும், பறவைகளும் கூட்டங் கூடும்.  

Comments

Popular posts from this blog

விஷம்

 சிறுகதை www.sinegithan.in இரவு நேரம் குடத்தில இருந்த தண்ணிய கொஞ்சம் சின்ன பாத்திரத்தில சரிச்சி, அணைஞ்சிபோன அடுப்புக்கு மேலே இருந்த சோத்துப் பானையில எஞ்சியிருந்த சோத்துக்குள்ள கொஞ்சமா ஊத்தி, கையால சோத்த தண்ணியோடக் கரச்சி கஞ்சியாக்கிக் குடிச்சிப்புட்டு, ஒண்டிக்கட்டையா தான் வாழும் பனை ஓலை குடில் போன்ற மண்கட்டு வீட்டில, வலக்கையை மடக்கி முடக்கி தலையணையா வச்சிக்கிட்டு, வாழ்ந்த நாள் நினைவுகள் அவ்வப்போது வந்துபோக, முடிந்துபோன தாரத்தின் நாட்கள் முன்னுக்கு வந்து நிற்க, பெற்றெடுத்தப் பிள்ளைகள் தூரத்தில் வாழ்ந்திருக்க அத்தனையையும் நினைத்துக்கொண்டிருந்த முதியவரை தன் மடியில் அள்ளி அணைத்திருந்தது தூக்கம்.   இரவு தன்னை ஆழப்படுத்திக்கொண்டே செல்லச் செல்ல, நள்ளிரவின் உச்சத்தில், எள்ளளவும் தன்நினைவின்றி உலகத்திற்கும் உடலுக்கும் தொடர்பேதுமில்லாதவரைப்போலத் தூங்கிக்கொண்டிருந்தபோது, திடீரென செவிகளில் 'டொம் டொம் டொம்' என்று ஒன்றன் பின் ஒன்றாய்ப் பாத்திரங்கள் வரிசையாகச் சரிந்துவிழுந்துகொண்டேயிருக்கும் சத்தங்கள் கேட்க, சவம்போல் கிடந்த அவர் சட்டென எழுந்து, தன் வீட்டின் அடுப்பங்கறைக்குச் சென்று அங்கும

தோற்றமும், மாற்றமும்

  தோற்றமும், மாற்றமும் குறிஞ்சிக் குளம், சின்னதோர் கிராமம், இருபுறமும் பக்கவாட்டில் வரிசையாக ஆறு தெருக்கள். இந்த சின்ன கிராமத்திலேதான் குடியிருந்தது செல்லமணியின் குடும்பம். 'ஏபுள்ள இன்னுமா எழும்பல நீ, எவ்வளவு நேரந்தான் படுத்து கிடப்ப, சீக்கிரத்தில எழும்பி வீட்டு வேலயைப் பாக்கப்புடாதா' என்று படுக்கையில் அயர்ந்து தூங்கிக்கொண்டிருந்த செல்லமணியை தாய் பூந்தெழிலம்மை கூப்பிட, 'பொறேன்மா, கொஞ்சம் தூங்கிட்டு வர்ரேன், ரொம்ப தூக்கமா வருது' என்று தாயின் காதில் விழும்படியாகப் புலம்பினாள் செல்லமணி. 'வயது இருபது ஆயிற்று, வளர்ந்து ஆளாயிட்ட, புகுந்த வீட்டில போயி உன் மாமியாருகிட்ட இப்படி புலம்ப முடியுமா?' என்று தனக்குள்ளோ சொல்லிக்கொண்டு, தன் வேலையைத் தொடர்ந்தாள் தாய் புந்தெழிலம்மை. 'நான் வடிச்சி கொட்டுற வீட்டுல நீ எப்படியிருந்தாலும் பரவாயில்ல, நீ வடிச்சிக் கொட்டப்போற வீட்டுல உனக்கு உருப்படியா வாழத்தெரிஞ்சா போதும்' என்று தனக்கான கடமை என காலை வேலையை வீட்டில் தொடர்ந்தாள் தாய் பூந்தெழிலம்மை.  நாட்கள் ஓட ஓட, சில வருடங்களும் கடந்தது, செல்லமணியின் தோற்றத்துடன் வயதும் 23 என வளர்ந

வசனம் வீணாவதில்லை

 வசனம் வீணாவதில்லை www.sinegithan.in கல்லூரி வகுப்புகள் முடிந்ததும், விடுதியை நோக்கி நடந்துகொண்டிருந்தான் ராகுல்; வீட்டை விட்டு தூரமாயிருந்ததால், வீட்டின் நினைவுகள் அவ்வப்போது அவனை வாட்டியெடுத்தன. ஒருபுறம் வீட்டில் வியாதிப்படுக்கையில் இருக்கும் தாய், மற்றொருபுறம் குடித்துவிட்டு குடும்பத்தினைக் குறித்து கவலையற்று வாழும் தந்தை. வறுமையின் நிமித்தம் உறவினர்களும் தனக்குத் தூரமாயிருக்கும் சூழ்நிலை. நண்பர்களது உதவியுடன் கல்லூரிப் படிப்பினை தொடர்ந்துகொண்டிருந்தான். எனினும், மற்ற மாணவர்களுக்குக் கிடைத்த வாழ்க்;கை, தனக்குக் கிடைக்கவில்லையே என்ற வருத்தம், அவ்வப்போது அவனை 'நீ ஏழை' என்பதை நிறுத்துச் சொல்லிக்கொண்டிந்ததால், 'வாழ்ந்தெதற்கு?' என்ற கேள்வியும் இடையிடையே இதயத்தில் வந்துபோனது. வருத்தங்களை நினைத்து, நினைத்து வீட்டிற்கு வந்துபோவதையும் தவிர்த்துவந்தான் ராகுல். கல்லூரியின் கடைசி ஆண்டு, வீட்டைக்கூட காணாதபடி கண்களை மூடிக்கொண்டு, படிப்பிலேயே மூழ்கியிருந்தான் ராகுல்.  மூன்று ஆண்டுகளுக்குப் பின், காலம் ஒருவழியாக கல்லூரி வளாகத்திலிருந்து தன்னை வெளியேற்ற, வீடு வந்து சேர்ந்தான் ராகுல