விரக்தி
இனி வேலையத் தேடுற பொழப்பே வேண்டாம், எத்தன கம்பனிதான் ஏறி ஏறி இறங்குறது, ஒருவனும் மதிக்கமாட்டங்கிறான் என்று அலுத்த மனதுடன் பூங்கா ஒன்றில் படுத்துக் கிடந்தான் ரவி. வேலைக்குப் போ, வேலைக்குப் போன்னு வீட்டுல தொல்ல, அப்பா அம்பா தள்ளு தள்ளுன்னு தள்ளினாலும், வான்னு கூப்பிட ஒருவனும் இல்லையே. வீட்டுக்கும் வேலைக்கும் இடையில ரோட்டுல காலத்தக் கடத்துறதுதான் வாழ்க்கையா? வேலை கிடச்சாதான போகமுடியும்னு மெல்லப் பேசினால்கூட, முழு வாலிபன் நீ, உன் வாழ்க்கைய நீ பார்க்கனும், கல்யாணம் முடிக்கணும், மாப்ள என்ன வேல பார்க்கிறாருன்னு, கையில எவ்வளவு வாங்குறாருன்னு பொண்ணு வீட்டுல கேட்டா, நாங்க என்னடா சொல்லுறது என்று பெற்றோர் அன்றாடம் அவனை எதிர்த்து அவனது வாயை மௌனமாக்கிக்கொண்டிருந்தனர். உன் கூட படிச்சவன் எல்லாம் பெரிய பெரிய கம்பெனியில வேலையில இருக்கானுக, நீ மட்டும் சும்மா வீட்டில இருந்தா, வருங்காலத்துல, எங்க காலத்துக்கு அப்புறம் உன் நிலம என்ன ஆகும்? என்ற கேள்வியின் அர்த்தங்கள் அனைத்தும் அவனுக்கு விளங்கினாலும், அந்தச் சூழ்நிலையிலிருந்து வெளியே வழியறியாமல், வழிதேடிக்கொண்டேயிருந்தான் ரவி.நண்பர்களுடன் சேர்ந்து எங்காவது சென்றால், செலவு செய்யக்கூட பெற்றோரிடத்தில்தான் பற்று வைக்கவேண்டும். அதிகாரத்தோடு அப்பா, அம்மா என்று கூப்பிட்ட வாய்தான் என்றாலும், அதற்கோ அது அடங்கிப்போய்க்கிடந்தது. நண்பர்களே செலவு செய்ய, வாங்கித் திண்ணும் வாலிபனாக வாழுவதை வெறுத்திருந்த அவன், தனிமையையே துணை என தெரிந்துகொண்டிருந்தான். அவன் வாழ்க்கையின் திறமைகள் அனைத்தையும், தனிமை சிறைபிடித்து வைத்திருந்தது, பல திறமைகளின் சிறகுகளை தனிமை ஒடித்துமிருந்தது. எதிர்கால வாழ்க்கையையே எதிரியாகப் பார்த்துக்கொண்டிருந்தான். ஏன் பிறந்தேன்? என்ற கேள்வி அவ்வப்போது தொலைக்காட்சி விளம்பரங்களைப் போல மனத்திரையில் வந்துபோய்க்கொண்டிருந்தது. உறவினர்கள் தனது வீட்டிற்கு வந்தால்கூட, வேலையைப் பற்றியே முதலில் வாய் திறப்பதால், உறவே போதும் என்ற வெறுப்பில், உறவுகளை விட்டும் ஒதுங்கி வாழ்ந்துகொண்டிருந்தான். பட்டப்படிப்பு படித்திருந்தாலும், எங்கே போவது? வாழ்க்கையை எப்படித் தொடங்குவது? வீட்டார் நிர்ப்பந்தத்தினால் என்ன செய்வது? என்ற அத்தனை கேள்விகளுக்கும் அப்போது அவனிடத்தில் விடைகள் இல்லை. கற்றுக்கொடுத்த ஆசிரியர்களைக் கண்டபோதும், காணாதவனாகவே அவனது கால்கள் திசைமாறிச் சென்றுகொண்டிருந்தன.வெறுப்பில் வீட்டை விட்டே வெளியேறிய அவன்; தன்னோடு கற்ற பாலிய நண்பண் ஒருவனிடத்திற்குச் சென்று ஒண்டியிருந்தான். பலநாட்களுக்குப் பின் பார்த்ததினால் பாசத்தோடு வரவேற்ற நண்பன்கூட, பலநாள் அவன் அவனுடன் தங்கியிருக்க தனது விருப்பத்தைத் தெரிவித்தபோது, மறைமுகமாக பார்வையிலும், செயலிலும் வெறுப்பைத் தெரிவித்தான். நண்பனின் பாவனைகள் நட்புக்கு முற்றுப்புள்ளி உண்டு என்னும் அத்தியாயத்தை படித்த அவன், நண்பனின் அறையை விட்டு, வீட்டை நோக்கி புறப்பட்டபோது, வழியில், ஆலயத்தின் வாசற்புற கோட்;டைச் சுவறில், 'நீ பயப்படாதே, நான் உன்னுடனே இருக்கிறேன்; திகையாதே, நான் உன் தேவன்; நான் உன்னைப் பலப்படுத்தி உனக்குச் சகாயம்பண்ணுவேன்; என் நீதியின் வலதுகரத்தினால் உன்னைத் தாங்குவேன்' (ஏசா 41:10) என்ற வசனம், வேலையைத் தேடுமுன் அவனை இயேசுவைத் தேடச் செய்தது.
Comments
Post a Comment