பட்டணத்திலிருந்து ஏறக்குறைய 10 கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் அந்தக் கிராமத்தில் மாத்திரம் இரவு சீக்கிரமே இறங்கி விடும்; காரணம் சுற்றிலும் அடர்ந்து நிற்கும் மரங்களும் செடிகளுமே. மாலை ஆறு மணிக்குப் பிறகு தெருக்கள் அனைத்தும் வெறிச்சோடிக் காணப்படும். ஆங்காங்கே நாய்களின் குரைப்புச் சத்தமும், காற்றில் அசையும் மரக்கிளைகளின் சலசலப்பும் மட்டுமே கேட்டுக்கொண்டிருக்கும். மின்விளக்குகள் இல்லாத அந்தக் காலத்தில், இரவு என்றாலே அக்கிராமத்தின் மக்களுக்கு ஒரு வித அச்சம் நெஞ்சிலே தொற்றிக் கொள்ளத் தொடங்கும்.
இருப்பினும், அந்த இருளுக்கும் அஞ்சாத ஒரு முதியவர் இருந்தார்.
எழுபது வயதைக் கடந்த அந்த முதியவரை அனைவரும் "தாத்தா" என்றே அழைப்பது வழக்கம். ஒவ்வொரு நாளும் மாலை மயங்கும் வேலையும், அவர் தன் வீட்டின் வாசலில் அமர்ந்து, பழைய பித்தளை விளக்கில் எண்ணெய் ஊற்றி, திரியைச் சரிசெய்து, தீபத்தை எரியவிடுவார். பிறகு அந்த விளக்கை கையில் ஏந்தினவராக மெதுவாக கிராமத்தின் பிரதானத் தெருவில் நடந்து செல்வார்.
அவரைப் பார்த்தவர்கள் பலரும் வியந்தார்கள். "இந்த வயதில் எதற்காக இந்த சிரமம்?" என்று சிலர் நினைத்தார்கள்.
ஒருநாள், நகரத்தில் படித்து வந்த இளைஞன் ஒருவன் அவரை வழிமறித்தான்.
"தாத்தா, உங்களிடம் நான் ஒரு கேள்வி கேட்கலாமா?" என்றான்.
"கேள் மகனே" என்றார் தாத்தா.
தாத்தா, "உங்களுக்குக் கண் பார்வை சரியாக இல்லை. வயதும் ஆகிவிட்டது. அப்படியிருக்க, இந்தச் சிறிய விளக்கை கையில் ஏந்திக்கொண்டு தினமும் ஏன் தெருவில் நடந்து செல்லுகிறீர்கள்? இதனால் கிராமத்திலும் மற்றும் தெருவிலும் என்ன மாற்றம் வந்துவிடப்போகிறது?" என்று கேட்டான்.
அந்த இளைஞனின் கேள்விக்கு முதியவர் பதில் ஏதும் சொல்லாமல் அமைதியாக தொடர்ந்து நடந்தார்.
சில அடிகள் தூரம் சென்றபின், நின்று, அந்த விளக்கை உயர்த்திக் காட்டியவாறு, "மகனே... இந்த ஒளி எனக்காக மட்டும் எரியவில்லை" என்று உரக்கக் கூறினார்.
முதியவரின் வார்த்தைகளைக் கேட்ட இளைஞன் அவரை குழப்பத்துடன் பார்த்தான். அப்போது அந்த முதியவர் இளைஞனை நோக்கி, எனது கண்களில் பார்வை குறைவாய் இருந்தாலும், எதிரே வருவோரை ஒருவேளை நான் பார்க்க இயலாமல் போனாலும், "எதிரே வருகிறவர்கள் என்னைக் காண வேண்டும்" என்பதற்காகவே இச்சிறிய தீபத்தை என் கைகளில் தினமும் நான் ஏந்திச் செல்கிறேன் என்றார். இந்த விளக்கின் ஒளி எனக்கு மாத்திரம் அல்ல, இந்த பாதையில் செல்லும் மற்றவர்களுக்கும் வழிகாட்டும். இல்லையென்றால், யாராவது பாதையில் இருக்கும் பள்ளத்தில் இடறி விழுந்து விடக் கூடுமே. "நான் சுமப்பது ஒரு விளக்கல்ல; மற்றவர்களின் பாதுகாப்பிற்கான ஒரு பொறுப்பு." என்று கூறினார்.
இந்த வார்த்தைகள் இளைஞனின் காதுகளில் விழுந்தபோதிலும், அவன் மனதிலோ அது ஆணித்தரமாகப் பதியவில்லை.
சில வாரங்கள் கடந்தன.
ஒரு நாள் கருமேகங்கள் வானத்தை மூடின. மழையும் பலமாகப் பெய்துகொண்டிருந்தது. இரவு நேரத்தில் கிராமம் முழுவதும் கண்ணுக்கெட்டிய தூரம் வரை இருள் மட்டுமே அடர்ந்து காணப்பட்டது. அந்த இளைஞனோ வேலையினை முடிந்து பட்டணத்திலிருந்து கிராமத்திற்குத் திரும்பிக்கொண்டிருந்தான். பாதை தெரியவில்லை. அங்கும் இங்கும் மழைநீர் ஓடியதால் வழியும் மாறியிருந்தது. ஒரு கட்டத்தில் அவன் தடுமாறி விழவும் நேரிட்டது.
அந்த நேரத்தில், தொலைவில் ஒரு சிறிய ஒளி தெரிந்தது.
மழையையும் காற்றையும் பொருட்படுத்தாமல் அந்த முதியவர் தனது விளக்கை கைகளால் மறைத்தபடி நடந்து வந்துகொண்டிருந்தார். இருளில் ஆங்காங்கே பாதை தெரியாமல் நின்று கொண்டிருந்த பலரும் அவரை நோக்கி வரத்தொடங்கினார்கள். பின்னர், அந்தச் சிறிய ஒளியைப் பின்தொடர்ந்து, அனைவரும் பாதுகாப்பாகத் தங்கள் தங்கள் வீடுகளை அடைந்தனர்.
மறுநாள் காலையில், இளைஞன் நேராக முதியவரின் வீட்டிற்குச் சென்று, அவருடைய கால்களில் விழுந்து, "தாத்தா, நேற்று இரவுதான் புரிந்தது. இருளை அகற்ற சூரியன் தேவையில்லை. ஒரு சிறிய விளக்கே போதும்" என்று என்றான். இதைக் கேட்ட முதியவரின் கண்கள் ஈரமானது. "மகனே, இதுதான் தேவன் நம்மிடம் எதிர்பார்க்கும் வாழ்க்கை. உலகத்தின் இருளைப் பற்றி குறை சொல்லாதே. உன்னால் முடிந்த அளவு ஒளியாக இரு. ஒரு மனிதனின் வாழ்க்கையில் நீ ஏற்றும் சிறிய ஒளி, அவனுடைய நித்திய வாழ்வின் தொடக்கமாகவும் இருக்கலாம்" என்றார்.
அந்த நாள் முதல் அந்த இளைஞன் மாறினான். பிறரை ஊக்குவிக்கும் வார்த்தைகளைப் பேசத் தொடங்கினான். துன்பப்படுகிறவர்களுக்கு ஆறுதல் கூறும் இளைஞனாக மாறினான். தேவனை அறியாதவர்களுக்கு நற்செய்தியை கூறி அறிவித்தான்.
"இருளைச் சபிப்பதைவிட ஒரு தீபத்தை ஏற்றுவது மேலானது" என்ற அந்தப் பாடம், அவன் வாழ்நாள் முழுவதும் மறக்காத சாட்சியாக மாறியது.
நம்முடைய வாழ்க்கை உலகத்திலிருந்து ஒளியை எதிர்பார்க்கும் வாழ்க்கையாக இருக்கக்கூடாது. மாறாக, உலகத்திற்கே ஒளியாக இருக்கும் வாழ்க்கையாக இருக்கவேண்டும். நம்முடைய அன்பான வார்த்தை, ஜெபம், உதவி, பரிசுத்தமான வாழ்க்கை—இவைகளின் மூலம் தேவன் பலருடைய வாழ்க்கையின் இருளை அகற்றமுடியும்
இவ்விதமாய், மனுஷர் உங்கள் நற்கிரியைகளைக் கண்டு, பரலோகத்திலிருக்கிற உங்கள் பிதாவை மகிமைப்படுத்தும்படி, உங்கள் வெளிச்சம் அவர்கள் முன்பாகப் பிரகாசிக்கக்கடவது. மத். 5:16

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக